தஞ்சை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர், நடராஜன், பொங்கல் திருவிழாவை ஒட்டி, வருடாவருடம் தஞ்சையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்.  அப்போது பரபரப்பாக ஏதாவது பேசுவார்.

இந்த வருட விழா நேற்று துவங்கியது. இதில் சசிகலாவின் உறவினர் திவாகரனின் பேச்சு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. “அ.தி.மு.க.வின் வளர்ச்சியில் எங்களுக்கும் பங்கு உண்டு” என்று அவர் பேசினார். (தனிச்செய்தியாக வெளியாகி உள்ளது.)

மேலும் திவாகரன் பேசியதாவது:

“இந்தியாவை பொறுத்தவரை தமிழர்கள் இரண்டாம் பட்சமாகத்தான் வாழ்கிறோம். இந்தியாவை ஆள்வதற்கு ஒரு முகர்ஜியோ, குப்தாதானே வருகிறார்கள். 40 எம்.பி.யை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்கிறோம்?.

எல்லாவற்றிலும் இரண்டாம் பட்ச குடிமக்களாகத்தான் தமிழர்கள் இருக்கிறோம். புயல் அடித்து ஒருவாரம் கழித்துதான் மத்திய குழுவினர் வருகிறார்கள்,. புயல் நிவாரணம் வரவில்லை. காவிரி பிரச்னையில் பின்வாங்குகிறார் பிரதமர்.

என்ன அநியாயம் நடக்கிறது  இங்கே?

ஜல்லிக்கட்டை தடையை மீறி அனுமதித்தால் அரசாங்கத்தை கலைத்துவிடுவோம் என்று  மிரட்டுகிறார்கள்.  கர்நாடக அரசு சுப்ரீம்கோர்ட் சொல்லியும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கலைக்க மறுக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை அனுமதித்தால் கலைத்துவிடுவதாக சொல்லுகிறார்கள்.

ஆகவே நாம்தான் ஒன்றுமையுடன் இருந்து இவர்களை வேரறுக்க வேண்டும்,” என்று ஆவேசமாக பேசினார் திவாகரன்.

“மத்திய பாஜக அரசை வேரறுக்க வேண்டும்” என்று சசிகலாவின் உறவினரான திவாகரன் பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் முக்கியான பேச்சாக கருதப்படுகிறது.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் மீதுள்ள வழக்குகளைக் காட்டி, மத்திய பாஜக அரசு மிரட்டி வைத்திருக்கிறது என்றும், தங்கள் சொல்படி சசிகலா மற்றும் அவரது குடும்பம் கேட்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வைத்திருக்கிறது என்றும் தகவல்கள் உலாவருகின்றன. இந்த நிலையில் மத்திய பாஜக அரசை வேரறுப்போம் என்று  திவாகரன் பேசியிருக்கிறார். ஆகவே மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்து இயங்க சசிகலா தரப்பு முடிவெடுத்துவிட்டது என்பதையே இப்பேச்சு வெளிக்காட்டுகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.