மும்பை:

மன்மோகன் சிங் வெற்றிகரமான பிரதமராகவே இருந்தார் என சிவசேனா கட்சியின் எம்பி சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.

அனுபவம் கேர் நடித்த தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் என்ற திரைப்படம் வரும் 11&ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்த படத்தின் ட்ரைலர், காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சய் ராவுத்

பத்து ஆண்டுகள் ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்த நாட்டை மீட்ட கதை என்று தலைப்பிட்டு, இந்த டீஸரை பாஜக பகிர்ந்தது.
இதனையடுத்து காங்கிரஸார் கொந்தளித்தனர். மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் குறித்து தவறான தகவல் இதில் சொல்லப்பட்டுள்ளதாக காங்கிரஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மகாராஷ்டி மாநில இளைஞர்கள் காங்கிரஸார் இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தை திரையிடும் முன்பு எங்களுக்கு பிரத்யேக காட்சியை திரையிட்டுக் காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை இந்த படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், இது குறித்து பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் எம்பி சஞ்சய் ராவுத் கூறும்போது, மன்மோகன் சிங் தற்செயலாக பிரதமர் ஆகிவிடவில்லை. நரசிம்மராவுக்குப் பிறகு 10 ஆண்டுகள் ஆட்சி செய்த வெற்றிகரமான பிரதமர் அவர். மக்களும் அவரை மதித்தனர் என்றார்.
இந்நிலையில், இந்த படத்தில் நடித்த அனுபவ் கேர் மற்றும் அவரது அணியினர் மீது, காங்கிரஸ் தலைவர்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பீகார் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகனிடம் செய்தி ஆலோசகராக இருந்த சஞ்சயா பானு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில், தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் படம் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.