டில்லி,

த்திய அரசு சில மாதங்களுக்கு முன்பாக இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்து சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, இந்த விஷயத்தில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வர இருப்பதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

மேலும் மதுரை ஐகோர்ட்டு கிளையின் தடை உத்தரவு நாடு முழுவதுக்கும் பொருந்தும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு  மத்தியஅரசு கொண்டு வந்த மாடுகள் இறைச்சிக்காக விற்கப்படு வது தடை செய்யப்படும் சட்டத்தில் கால்நடை சந்தைகளில், இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்தது. பசு, எருது, எருமை, கன்று குட்டி, கறவை மாடுகள், ஒட்டகம் உட்பட கால்நடை கள் விற்பனைக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மத்தி அரசின் இந்த சட்ட திருத்தத்துக்கு நாடு முழுவதும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதுபோல் பெரும்பாலான மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்றும் போர்க்குரல் எழுப்பின.

இதையடுத்து ஐதராபாத்தை சேர்ந்த தனியார் அமைப்பு உச்சநீதி மன்றத்தில் கடந்த ஜூன் 7ந்தேதி  மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு கடந்த மாதம் 15ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட், 2 வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

அதையடுத்து இன்று  வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது ஆஜரான மத்தியஅரசு வழக்கறி ஞர், இறைச்சிக்காக மாடுகள் விற்பனை தடை சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று ம நீதிமன்றத்தில் கூறினார். மேலும் 3 மாதங்களுக்கு புதிய விதிகளை அமல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மாடு விற்பனை தடை சட்டம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும்,  மதுரை உயர்நீதி மன்ற  கிளையின் தடை உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து,  மத்திய அரசின் பதிலை ஏற்று வழக்குகளை முடித்து வைப்பதாக  உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.