பெங்களூரு

சக்கர நாற்காலியை உபயோகப்படுத்தும் ஒரு மாற்றுத் திறனாளியை ஏர் இந்தியா ஊழியர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை.

கௌசிக் மஜும்தார் என்னும் பயணி நடக்க இயலாத ஒரு மாற்றுத் திறனாளி ஆவார்.   இவர் நேற்று பெங்களூருவில் இருந்து கொல்கத்தா செல்ல விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.   அப்போது  ஏர் இந்தியா ஊழியர்கள் அவருடன் தகராறு செய்து இறுதியில் அவரை விமானத்தில் ஏற அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர்.   இந்த சம்பவம் அங்கு பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இது குறித்து கௌசிக் மஜும்தார்,  “எனக்கு நடக்க இயலாது என்பதால் நான் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார சக்கர நாற்காலியை உபயோகித்து வருகிறேன்.   நான் பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்தில் பயணிக்க போர்டிங் பாஸ் வாங்கினேன்.   விமானத்துக்கு செல்ல நிலையத்தில் உள்ள பஸ்ஸில் ஏறச் சென்றேன்.  அப்போது ஏர் இந்தியா உழியர் ஒருவர் என்னை மின்சார சக்கர நாற்காலியில் இருந்து சாதாரண சக்கர நாற்காலிக்கு மாறச் சொன்னார்.   நானும் மாறினேன்.   எனது மின்சார சக்கர நாற்காலியில் உள்ள இணைப்பை துண்டிக்கச் சொன்னார்.

நான் எப்போதும் அதில் உள்ள பேட்டரிகளை எடுத்து விடுவேன்.  அதுதான் வழக்கம் எனச் சொன்னேன்.   ஆனால் அவர்  இணைப்புக்களை நீக்க வேண்டும் என வற்புறுத்தினார்.   அதை திரும்ப இணைக்க எனக்குத் தெரியாது என்பதால் நான் அதற்கு மறுத்தேன்.   அந்த ஊழியருக்கும் திரும்ப இணைக்கத் தெரியாது என்பதால்  மேலும் மறுத்தேன்.  நான் முழுக்க முழுக்க சக்கரநாற்காலியை நம்பி உள்ளவன்.   இந்த ஊழியரின் நடவடிக்கையால் என்னால் பயணம் செய்ய முடியவில்லை” எனக் கூறி உள்ளார்.

இது குறித்து ஏர் இந்தியா அதிகாரி ஒருவர், “அந்தப் பயணியிடம் நாங்கள் சோதனையின் போதே பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் விமானத்தின் உள்ளே அனுமதிக்கப் பட மாட்டாது என தெரிவித்திருந்தோம்.   அவரும் அதற்கு அப்போது ஒப்புக் கொண்டுள்ளார்.   அதன் பின்பு சாதாரண சக்கர நாற்காலிக்கு மாற மறுத்துள்ளார்.   நாங்கள் மின்சார சக்கர நாற்காலிகள் விமானத்தின் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்னும் பாதுகாப்பு விதிமுறையை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.