வெலிங்டன்: ராணுவ ஆட்சியின் எதிரொலியாக மியான்மர் நாட்டுடனான அனைத்து அரசியல் மற்றும் ராணுவ உறவுகளை தற்காலிகமாக முறித்துக் கொண்டுள்ளதாக நியூசிலாந்து அறிவித்து உள்ளது.

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அத்தோ்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, ஆட்சியை ராணுவம் கடந்த வாரம் கைப்பற்றியது.

ஆளும் கட்சியின் முக்கிய தலைவா்களான ஆங் சான் சூகி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மியான்மா் மக்கள் போராடி வருகின்றனா்.

இந் நிலையில், மியான்மர் நாட்டுடனான அனைத்து அரசியல் மற்றும் ராணுவ உறவுகளை நியூசிலாந்து முறித்துக் கொண்டது. மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்டித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அங்கு நடக்கும் செயல்கள் வேதனை அளிப்பதாக உள்ளது என்று கூறி உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: எங்களால் செய்ய முடிந்ததை மியான்மர் நாட்டுக்கு செய்வோம். மியான்மர் நாட்டுக்கு எந்த நிதியுதவியும் எந்த வகையிலும் ராணுவ ஆட்சியை ஆதரிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

ராணுவ ஆட்சியை ஆதரிக்கவில்லை, அங்கு காவலில் வைக்கப்பட்டு உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் நானாயா மஹூதா அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.