03-vaiko-vijayakanth
சென்னை:
மக்கள் நலகூட்டணியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட வைகோ விருப்பம் தெரிவித்துள்ளார்.  முதல்வர் வேட்பாளராக தன்னை கருதிக்கொண்டிருக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, மக்கள் நலக்கூட்டணிக்கு  அழைப்பு விடுத்துள்ள நிலையில், வைகோ இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் “அதிர்ச்சி” அலையை ஏற்படுத்தி இருக்கிறது.
மண்டல மதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செல்வந்தியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசும்போது “மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருக்கும், வைகோ முதல்வர் வேட்பாளராக வேண்டும். எப்போதும்போல யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது” என்று வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கு பதில் அளித்த வைகோ பேசும்போது, “எனக்கு எந்த ஆசையும் இல்லை. உங்கள் கட்டளையை ஏற்கிறேன். மறுப்பும் சொல்ல முடியவில்லை என்றதும் அரங்கத்தில் இருந்த நிர்வாகிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
தொடர்ந்து வைகோ பேசுமபோது, “திமுகவுடன் கூட்டணி சேராவிட்டால் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக அர்த்தமாகாது. மக்கள் நலக் கூட்டணியைக் கண்டு கருணாநிதி  பயப்படுகிறார்.  ஆகவே, மதிமுக கட்சியை அழித்துவிட  வேண்டும் என அவர் நினைக்கிறார். இப்படி எங்கள் கட்சியை அழிக்க நினைக்கும் திமுகவை ஒருபோதும் ஆட்சிக்கு வர விடமாட்டோம். அதே நேரத்தில், அதிமுகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றியே தீருவோம்.
இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி, இந்த முறை ஆட்சிக்கு வரும். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளையும் பிரிக்க திமுக முயற்சி செய்கிறது.  தேர்தல் நெருங்கும் நேரத்தில் நான்கு கட்சிகளும் தனித்தனியாக போய்விடுவர் என திட்டம் போட்டு, ஊடக விவாதங்களில் கருணாநிதி பேச வைக்கிறார். நிச்சயமாக, தேர்தலை நான்கு கட்சிகளும் சேர்ந்து சந்திப்போம். மற்ற கட்சிகளும் விரைவில் வர இருக்கிறார்கள். கடந்த காலத்தில் கட்சியை காப்பாற்ற சில தவறான முடிவுகளை நான் எடுத்தேன். இனி அந்த தவறு ஒதுபோதும் நடக்காது. தற்போது தமிழகத்தை காப்பாற்றவே மக்கள் நலக் கூட்டணியை அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணி அவசர கோலத்தில் அமைக்கப்பட்டதில்லை” என்று வைகோ பேசினார்.
வைகோவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் “அதிர்ச்சி” அலையை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் நலக்கூட்டணிக்கு தே.மு.தி.க. வர வேண்டும் என்று அக்கூட்டணியின் தலைவர்கள் சமீபத்தில் விஜயகாந்தை சந்தித்தார்கள். விஜயகாந்த், தன்னை முதல்வர் வேட்பாளராக கருதி செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், வைகோ முதல்வர் வேட்பாளராக போட்டியிடப்போதாக அறிவித்திருக்கிறார்.
“விஜயகாந்த், மக்கள் கூட்டணிக்கு வரமாட்டார் என்பது உறுதியாக தெரிந்ததனால் வைகோ இப்படி பேசியிருக்கலாம். இதனால் மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் வருவதற்கு வைகோவே ரெட் சிக்னல் போட்டுவிட்டார்”  என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.