b

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு அமிர்தாநந்தினி, தேஜஸ்வனி என்ற இரண்டு பெண் குழந்தைகளும், பிரசன்ன குமார் என்ற மகனும் உண்டு.   பதின்மூன்று வயதான  பிரசன்ன குமார், மூளைக்காய்ச்சலால் நேற்று முன்தினம் இறந்தார்.   எப்போதும் துறு துறுவென ஓடியாடிக்கொண்டிருக்கும் சிறுவன் பிரசன்னாவை முடக்கி, உயிரையும் பறித்த மூளைக்காய்ச்சல் பற்றி அனைவரும் அறிவது அவசியம்.

மூளைக்காய்ச்சல் என்றால் என்ன?

வைரஸ் கிருமிகளால் மூளையும், நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு செயல் இழந்து போய்விடுவதுதான் மூளைக் காய்ச்சல்.   இந்த நோய் பெரும்பாலும் குழந்தைகளைத்தான் தாக்குகிறது.

என்ன பாதிப்பு? 

நோயால் கை கால்கள் செயல் இழந்துபோம். வலிப்பு, கண் பாதிப்பு ஏற்படும். காது கேளாமை போன்ற நிரந்தரப் பாதிப்புகள் ஏற்படலாம்.

எப்படி ஏற்படுகிறது?

தாவாட்டி அம்மை, மணல்வாரி அம்மை, ரூபெல்லா, சைட்டோ மெகாலோ வைரஸ், எப்ஸ்டீன் வைரஸ், பாக்ஸ் வைரஸ், ஈக்குன் வைரஸ், ரேபிஸ் வைரஸ், டெங்கு வைரஸ் போன்றவை மூளையைப் பாதிக்கும் வைரஸ்கள்.நோயின் தீவிரத்தை தீர்மானிப்பவை. நோய்க் கிருமிகளின் வீரியம், நோயாளியின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புத் திறன், மூளையில் உள்ள நீரின் அழுத்தம் ஆகியவைதான் மூளைக்காய்ச்சலின் பாதிப்பை தீர்மானிக்கும்.

அதாவது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், இந்த நோயின் தாக்கம் குறைவாக இருக்கும்.

வகைகள்

மூளைக்காய்ச்சல் மூன்று வகை இருக்கின்றன.

  • அறிகுறிகள் இல்லாமல், நோயின் தாக்கம் குறைவாகவும் இருக்கும்.
  • மூளையின் பாதுகாப்பான் ஜவ்வைத் தாக்கும்
  • மூளையில் பாதுகாப்பான ஜவ்வையும், மூளையையும் மிகத் தீவிரமாகத் தாக்கி நரம்பு மண்டலத்தை செயல் இழக்க வைக்கும்.

அறிகுறி:

  • மிக அதிகமான காய்ச்சல்
  • கடுமையான தலைவலி
  • குமட்டல் வாந்தி
  • நினைவிழத்தல்
  • வலிப்பு
  • இதயம் மற்றும் சுவாச உறுப்புகள் செயலிழத்தல்
  • கண் தசை நார்கள் செயல் இழப்பு
  • கை, கால்கள் முடங்குதல்

சிகிச்சை:

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இருந்தாலோ, குழந்தை திடீரென்று  நினைவிழந்தாலோ, வலிப்பு வந்தாலோ உடனே குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.