vaiko ramadas
மதிமுக பொதுச்செயலாளர் விடுத்துள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தியில்,
’’மனித குல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று கொல்கதா எனப்படும் கபால ஸ்தலத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. நெஞ்சைப் பிளக்கும் அந்த சோக சம்பவம்தான் ரட்சகர் இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட அவலமாகும்.
அந்தகார இருள் விலகி ஒளி வெள்ளம் பாய்வது போல் மூன்றாம் நாள் இயேசுபெருமான் உயிர்த்தெழுந்த உன்னதத்தைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறித்தவப் பெருமக்கள் கொண்டாடுகிறார்கள்.
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இதயத்தில் அமைதியையும், இளைப்பாருதலையும் வழங்குகிற இயேசுநாதரின் அறிவுரைகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானவை ஆகும். கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுங்குண்டவர்களுக்கும் விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் ஏற்படுத்துகிறது.
இயேசுநாதர் உயிர்த்தெழுந்தார். மீட்பரின் போதனைகள் மனித குலத்துக்கு வழிகாட்டின. ஊழல் நரகத்தில் சிக்குண்டு நலிந்துள்ள தமிழகத்தை நேர்மையான அரசாட்சி எனும் நல்ல நிலைமைக்கு மீட்பதற்கு தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழக வாக்காளப் பெருமக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் கிறிÞதவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.’’என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் விடுக்கும் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில்,
’’உலகை இரட்சிக்க வந்தவரான இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி தமிழக மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்த துயரங்கள் இன்னும் 50 நாட்களில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறியே தீரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன.
தலையில் முள்முடி; பாரமான சிலுவை; அந்தச் சிலுவையோடு சேர்த்து ஆணிகளால் அடிக்கப்பட்ட கொடுமை; இத்தனை துன்பங்களை அனுபவித்த போதிலும் தம்மை துன்புறுத்தியவர்களை மன்னியும் என்று இறைவனிடம் இயேசு மன்றாடினார் என்று விவிலியத்தில் படிக்கிறோம். இயேசு பெருமான் எப்படி சிலுவையில் அறையப்பட்ட பிறகு உயிர்த்தெழுந்தாரோ, அதேபோல் தமிழகத்தில் சிலுவையில் அறையப்பட்ட உண்மை, நேர்மை, நீதி, மக்கள் விழிப்புணர்வு ஆகியவையும் விரைவில் உயிர்த்தெழும். அது தமிழக மக்கள் இதுவரை அனுபவித்து வந்த துயரங்களுக்கும், சீரழிவுகளுக்கும் முடிவு கட்டி, மாற்றத்தை உருவாக்கி முன்னேற்றத்தை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்லும் என்பது உறுதி!
இயேசுபிரானின் உயிர்த்தெழுதல் பண்டிகையைக் கொண்டாடுகிற இந்த நேரத்தில் அவரைப் பின்பற்றி மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவும், மற்றவர்களை மன்னிக்கவும் கற்றுக்கொள்வோம். பசித்தவர்களுக்கு உணவு அளிக்க முன்வருவோம். ஏழைகளை நேசிப்போம். மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து அனைவரிடமும் அன்பு செலுத்தி அன்புள்ளவர்களாக வாழ உறுதியேற்போம்.’’என்று கூறியுள்ளார்.