சென்னை:
தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் மகன் மற்றும் உறவினர் வீட்டில் ரூ. 18 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள், 2 கிலோ தங்கம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ராம் மோகன் ராவ் அண்ணா நகர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 

தமிழக தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடைபெறுகிறது. ராமமோகன் ராவ் மகன் விவேக்கிற்கு திருவான்மியூர். சித்தூர், பெங்களூருவில் உள்ள வீடுகள் உள்பட 13 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ராமமோகன் ராவ் வீடு மற்றும் தலைமை செயலகத்திலும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணா நகரில் உள்ள ராமமோகன் ராவ் வீட்டில் நடந்த சோதனையில் கீழ் தளத்தில் உள்ள அறையில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை ஆய்வுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்டு செல்கின்றனர்.
சோதனையில், ராமமோகன் ராவ் மகன், உறவினர் வீட்டில் இருந்து ரூ.18 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள், 2 கிலோ தங்கம், பரிசுப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் தொடர்ந்து சோதனை நடைபெறுகிறது