பீஜிங்,

எவ்வளவோ தேடிப்பார்த்தும் பொருத்தமான பெண் கிடைக்காததால் நானே ஒரு பெண்ணை வடிவமைத்து  திருமணம் செய்துகொண்டேன் என்கிறார் சீன கணிப்பொறியாளர் ஷெங்.

சீனாவில் ஷிஜியாங் மாகாணத்திலிருக்கும் ஹாங்ஸூ நகரில் வசிக்கிறார் ஷெங் ஜியாஜியா என்ற கணினி விஞ்ஞானி.  இன்று வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் படு கில்லாடி இவர். சீனாவிலிருக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிய ஷெங் 2014 ம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு இணையதளம் தொடர்பான புதிய நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் 31 வயதான ஷெங், தனது திருமணத்துக்காக பெண் தேட ஆரம்பித்தார். தேடல் படலம் நீண்டுகொண்டே சென்றது. ஷெங்-க்கு யாரும் பொருந்தி வரவில்லை.

தீவிர யோசனைக்குப் பிறகு தனக்குத் தேவையான மனைவியை தானே வடிவமைக்கத் தொடங்கினார். ஷெங் இயல்பிலேயே செயற்கை நுண்ணறிவு படைத்தவர் என்பதால் மனைவியை வடிவமைக்கும் பணியை ரசித்து செய்தார்.

அதனால் அந்த வேலை மிக எளிதாக முடிந்தது. எல்லாப் பணிகளும் முடிந்து அந்தப் பெண் ரோபாட்டையே திருமணம் செய்துகொள்ளப் போவதாக பெற்றோரிடம் தெரிவித்ததும் அவர்கள் அதிர்ச்சிடையாமலா இருப்பார்கள்..

ஒரு வழியாக பெற்றவர்களிடம் சம்மதம் பெற்று கடந்த வெள்ளிக்கிழமை உற்றார் உறவினர் சூழ நடந்த வைபோவ நிகழ்ச்சியில் பெண் ரோபாட்டை மனைவியாக்கிக் கொண்டார்.

மனைவி ரோபாட்டுக்கு சீன பழக்கவழக்கங்கள் நன்றாகவரும் என்று ஷெங் கூறுகிறார். மேலும்  மனைவி ரோபாட்டுக்கு யிங்யிங் என்று இனிமையாக பெயர் சூட்டியிருக்கிறார் ஷெங்.

சீனக் கலாச்சாரப்படி திருமணத்தின் போது  மணப்பெண் கருப்பு நிற ஆடையிலும் சிகப்புக் கலரில் தாவணியும் அணிந்திருக்கவேண்டும். அந்த வழக்கப்படி திருமணத்தில் யிங்யிங் ஆடை அணிந்து வந்து அனைவரையும் மகிழ்வித்தாள். கூடவே திருமணத்துக்கு வந்தவர்களிடம் சீன மொழியில் பேசி அசத்தினாள் யிங்யிங்.