நியூயார்க்:

அமெரிக்க மாணவர் வடகொரியாவில் கடுமையாக தாக்கப்பட்டு கோமா நிலையில் திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்குக்கும் இடையே உச்சகட்ட பதட்டம் நிலவுகிறது. அமெரிக்காவில் விர்ஜினியா பல்கலைக் கழகத்தில் படித்துவந்த ஓட்டோ பிரடெரிக் வாம்பியர் என்ற மாணவர், கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசாவில் வடகொரியா சென்றார்.

வடகொரியா தலைநகர் பியோங்யோங் நகரில் உள்ள ஓட்டலில் அவர் தங்கியிருந்தபோது, வடகொரிய போலீசார் அவரை கைது செய்தனர். அமெரிக்காவுக்காக அவர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டினர். முன்னதாக அவர் பலமுறை வடகொரியா வந்து சென்றிருப்பதாகவும் தனது குற்றத்தை ஓட்டோ பிரடெரிக் ஒப்புக் கொண்டதாகவும் வடகொரியா அரசு அறிவித்தது.

அவர் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 17 மாதங்கள் சிறையில் இருந்த அவர் உடல் நலமின்றி கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக அவரை தற்போது அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது வடகொரியா.

அமெரிக்கா திரும்பிய ஓட்டோ வாம்பியர் நேற்று உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு வடகொரியா அதிகாரிகளின் சித்ரவதையே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே வடகொரியா சென்ற சில அமெரிக்கர்களுக்கு இதே போல நடந்ததாகவும் ஆனால் இப்போது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இரு வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.