வரலாறு முக்கியம் அமைச்சரே : கடந்தகால அரசியல் வரலாற்றில் முக்கிய சம்பவங்கள் இந்த பகுதியில் இடம்பெறும்.
28vaz41989ம் வருடம் ஏப்ரல் 9ம் தேதி, வாழப்பாடி ராமமூர்த்தி, தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு ஏப்ரல் 14ம் தேதி சென்னை வந்தார். அவரது பதவி ஏற்பு என்பதே பெரும் போர்ச் சூழலில்தான் நடந்தது.  அந்த அளவுக்கு மூப்பனார் ஆதரவாளர்களின் எதிர்ப்பு இருந்தது.
அன்றைய நிலவரத்தைச் சொல்கிறது,   “தராசு” வார இதழின் 28.04.1989 தேதியிட்ட இதழின் கட்டுரை:
கறுப்புக்கொடி – கலாட்டா – காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்பு!
மாறியது காங்கிரஸ் மாற்றியது யாரோ?
தமிழக காங்கிரஸ் கமிட்டி  அலுவலக நிர்வாகி வள்ளியப்பன்தான் புதிய தலைவர்  கூ.ராமமூர்த்தியின் வருகை குறித்து  முதல் அறிக்கை வெளியிட்டார்.  நாம் நிலவரத்தை த் தெரிந்து கொள்ள மூப்பனாரை அவரது ஸ்ரீராம் நகர்  வீட்டில் சந்தித்து பேசினோம்.
வள்ளியப்பன் பெயரால்  அறிக்கை வருகிறதே!  நீங்களோ அல்லது  உங்களின் கீழ் பணியாற்றிய  நிர்வாகிகளோ அறிக்கை விட்டு வரவேற்பு  பணிகளை கவனிக்க கூடாதா?
மூப்பனார்: நீங்க சொல்றது சரிதான். ஒத்துகிறேன். ஆனா அவர்  சென்னைக்கு வர்றது  பத்தித் தகவலே இல்லையே!  நான் என்ன பண்ண முடியும்?
த;   ராமமூர்த்தி தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு, அவர்  உங்களைச சந்திக்கவில்லையா?
மூ;ஓ..சந்தித்தாரே! டெல்லியில்  அனென்ஸ்மெண்ட் வந்த  அன்னக்குச் சந்திச்சார். பேசினோம்.
த;அப்போ இதப்பத்தி பேசலியா?
மூ; அவர் என்னைக்கு  மெட்ராஸ்  வர்றார்னு தகவலே எனக்கு  இல்லேங்கறனே!
ஜி.கே மூப்பனாரை சந்தித்து உரையாடிவிட்டு  காமராஜ் பவன் வந்து –காங்கிரஸ் அலுவலக நிர்வாகி வள்ளியப்பனைச் சந்திதுப் பேசினோம்.
த; அவுட் கோயிங்  பிரசிடெண்ட்தானே  வரவேற்று  அறிக்கை தரணும்  நீங்க அறிக்கை  விட்டிருக்கீங்களே –இது சரியா?
வள்ளி; யார் புதுத் தலைவரா  வந்தாலும்  நான் தான்  அறிக்கை  கொடுப்பேன்.  இது தான் கடந்த கால நடைமுறை.
அடுத்த அறையில் இயங்கும்  தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்றோம்.
மாநில துணைத் தலைவர்  சக்திவடிவேலு,  செயலாளர்  பூதூர்  வேணுகோபால் ஆகிய  இருவரும்  புதியதலைவரை  வரவேற்க  வண்ணச் சுவரொட்டிகளைத் தயாரித்து  ஒட்டுவதற்கு  ஏற்பாடு  செய்து கொண்டிருந்தனர்.
நேராக தமிழ் நாடு ஐ.என்.டி.யு.சிக்குச் சென்றோம் .
கவிஞர் கண்ணதாசனின் நண்பரான  அரசு நாச்சியப்பன் கூ.ரா.வின்  கல்லூரி நண்பர். தாமோதரன், ஆர்.வி. உதவி ஜனாதிபதியாக  இருந்தபோது நேர்முக உதவியாளராக இருந்த  முனுசாமி, நவநீதகிருஷ்ணன், தர்மபுரி  குப்புசாமி, சீமாட்டி,ஜெயராமன்,அம்பத்துர் ஆதிகேசவன் .தேசிங்குராஜன், தொலைகாட்சி சங்கத் தலைவர் பிரதாப் எல்லோரும் ஆளுக்கு ஒரு வேலையில் ஈடுப்பட்டிருந்தனர்.
மாலை பத்திரிக்கையில் “18 எம்.எல்.ஏ.க்கள் கூ.ராவுக்கு எதிர்ப்பு” என்ற செய்தியைப் படித்துவிட்டு  “என்னைய்யா இது..  மூப்பனார் ஆளுங்க  ஒரே கலாட்டா பண்றாங்களே;’’என்று கூற-
இன்னோருவர் இருக்காதா பின்னே? ஆலமரமா இருந்த மூப்பனாரை இல்ல கீழ தள்ளியிருக்கோம்! எள்ளுச் செடியா கிள்ளி எறிஞ்சா சத்தம் வராம இருக்க? என்று உவமை நயத்துடன் விளக்கினார்.
13 தேதி காலையே மதுரை எம்.எஸ்.ராமச்சந்திரன் போன்ற ஐ.என்.டி.யு.சி. தலைவர்கள் தலைநகரில் முகாமிட்டு  இருந்தனர்.!
மூப்பனார் ஆதர்வாளர்களில் உள்ள சில தீவிரவாதிகள் ராஜீவ்காந்தியைக் கண்டித்து ஒரு போஸ்டரும், கூஜா ராமாமூர்த்தி ஒழிக  என்று  ஒரு போஸ்டரும்  அடித்து – இரவு 12 மணிக்கு மேல் சென்னை நகரில் ஒட்ட ஆரம்பித்தனர்.
உஷாரான கூ.ரா.ஆட்கள் ஒரு நபரை கையும் களவுமாகப் பிடித்துப் போஸ்டரைப் பறிமுதல்  செய்தனர். இதை உன்னிடம்  கொடுத்து ஒட்டச் சொன்னது யார்,;’ என்று இரண்டு தட்டு தட்டினர். பாவம் கூலிக்குப் போஸ்டர் ஒட்டும் அந்த அப்பாவி கூலி தொழிலாளி பெப்பெப்பெப்பே… என்றான். அவன் ஊமை. பிடித்து வந்த ஐ.என். டி.யு.சி. தொழிலாளர்கள்  பாவமாய் இருப்பதாகக் கூறித் தட்டுவதை நிறுத்தி அனுப்பிவிட்டனர்.
மறுநாள் காலை 14 ம் தேதி  புத்தாண்டு. டெல்லியிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கூ ராமமூர்த்தி  காலை 9 மணிக்கு திரிசூலம் விமானநிலையம் வந்தார்.
ஏற்கெனவே மதுரையிலிருந்து விமானத்தில் வந்திருந்த  டி ராஜேந்தர் டெல்லி விமானம் வரும் வரை காத்திருந்து  விமானத்திலிருந்து வந்த  கூ.ராவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
விமானநிலையம் முழுவதும் கதர்மயம்.  காலை எட்டு மணிமுதலே வேன், லாரி, பஸ், கார்களில்  பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் திரண்டிருந்தனர். மாதர் காங்கிர்ஸ் தலைவி லட்சுமி ஆல்பட், லட்சுமி டாக்டர் ரமாதேவி   சேலம் சிந்தாமணி உட்பட ,200 பேர் கூடியிருநதனர்.
வடசென்னை காங்கிரஸ் தலைவர் மணிவர்மா,தென் சென்னை காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன், சேலம் மாவட்டத் தலைவர்  கோபால்.தவிர மற்ற மாவட்டத் தலைவர்கள் ஆப்செண்ட்!. அண்ணா தி,மு.க. பிரமுகர் எம்.பி.எஸ்ஸின் மகன் குலோத்துங்கன் ஈ.வே.சி.சம்பத் மகன் இனியன் சம்பத்,கே.டி.கோசல்ராம் மகன் சுபாஷ் ஆகியோர் மாலையுடன் காத்திருந்தனர்.
இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த சக்திவடிவேலு, பூதூர் வேனுகோபால்,மோகன்ராஜ் இளைஞர் பட்டாளத்துடன் காத்திருந்தார். காலை 9.30க்கு  மணிக்கு கதர்ச் சட்டைகளின் நெரிசலில் சிக்கித் தவித்தாறே ,சட்டை கிழிந்து செருப்பு இல்லாமல்  விமானநிலைய வாயிலுக்கு  வந்தார் கூ.ராமமூர்த்தி.
நூற்றுக்காணக்கான பச்சை சட்டைத் தொண்டர்களும்  பத்து பதினைந்து போலீஸாரும்  கூட்டத்தை சமாளித்து  அவரை பாதுகாப்பாக கொண்டுசெல்ல முடியாமல் திண்டாடினர்.
மேள தாளம் நாதஸ்வர வரவேற்பு ஆரத்தி முடிந்து ராமமூர்த்தி ;திரிசூலம் விமானநிலையத்தின் எதிர்ப்புறம் அமைக்கப்பட்டிருந்த  மேடைக்கு திறந்த ஜீப்பில் வந்தார். மேடையில் மத்திய இணை அமைச்சர் பிரபு, குப்புசாமி எ.ம் பி. வள்ளல்பெருமான் ,எம்.பி.ஜெய்காந்தன், இரா.அன்பரசு, தங்கபாலு எம்.பி. ஆகியோர் தொண்டர்களுக்கு காட்சியளித்தனர்.
பழனி எம்.பி.யான் சேனாதிபதி கவுண்டர்  மேடைக்கு வரமுடியாமல் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து ஒரு வழியாக வந்தவழியே திரும்பினார். கட்சியில் உள்ள வேறுபாடுகளை மறந்து எல்லோரையும் அணைத்துக் கொண்டு செல்வேன் என்றார், கூ ராமமூர்த்தி மூப்பனாரைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘தலைவர் என்றே அவர் குறிப்பிட்டார்.
காமராஜ் சிலைக்கு மாலை அணிவிக்க கூரா சென்றபோது  எற்கெனவே திட்டமிட்டப்படி அண்ணா நகர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்திரன்  தலைமையில் வ.சாய்பாபா உட்பட 10 பேர் அவருக்கு கருப்பு கொடி காட்ட முயன்றனர்.  இந்த விஷயத்தை ஏற்கனவே மோப்பம் பிடித்து வைத்திருந்த கூ ராவின்  நண்பர்கள் தயாராய் இருந்து தக்க படி  அவர்களைக் கவனித்து விரட்டியடித்தனர்.
இன்னொருபிரிவு மூப்பனார் ஆதர்வாளர்கள் 10 பேர் மாணவர் காங்கிரஸ் தலைவர் செல்வகுமார் கைடு லைன்ஸ் படி  கூரா. பதவி யேற்கும் நேரத்தில்  கறுப்புக்கொடி காட்ட வந்தனர். 10 பேரும் கல்லூரி மாணவர்கள் அவர்களுக்கும் செமை அடி மூன்று பேர் தப்பி ஓட ஏழு பேரைப் போலீசார் மீட்டு  காவல் நிலையத்தில் வைத்து ஐஸ் வாட்டர் கொடுத்து விசாரித்தனர். மாணவர் காங்கிரஸ் தலைவரும்  மூப்பனாரை நாள் தோறும்   சந்திப்பவருமான செல்வகுமார் இந்தப் போராட்டத்திற்கு தளபதி!
இப்படியாகததானே தமிழக புதிய காங்கிரஸ் தலைவர் கூ ராமமூர்த்தி சீரோடும் சிறப்போடும் பதவியேற்றார்.
நன்றி: தராசு வார இதழ்