அனந்த்நாக்: வறுமையின் விளிம்புவரை சென்று, வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் போராடிய ஒரு காஷ்மீர் முஸ்லீம் குடும்பத்தை காப்பாற்றியுள்ளார் புலம்பெயர் காஷ்மீர் பண்டிட் ஒருவர்.

கொடுமையும் சுவாரஸ்யமும் நிறைந்த அந்தக் கதையை சற்றே கேட்போம்.

தெற்கு காஷ்மீர் மாநிலத்தில், அனந்த்நாக் மாவட்டத்தில், இமயமலையின் எழிலுக்கு மத்தியில் அமைதியாக வீற்றிருக்கிறது அந்த ஹபத்நார் கிராமம். அங்கே வசிப்பவர்கள்தான் மெளசுதீன் பட் என்ற வயோதிகரின் குடும்பத்தினர். மண்ணால் ஆன சுவரும், துருபிடித்த தகரத்தால் வேய்ந்த கூரையும்தான் அவர்களின் வீடு.

கால் உடைந்த மெளசுதீன் பட்டால், 68 வயதான தன் மனைவியையும், சிறைக்குச் சென்ற தன் மகன் ஃபயாஸின் குடும்பத்தையும் காப்பாற்ற முடியவில்லை. இவரோடு சேர்ந்து, மனைவி, மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியோர் பல நாள் தொடர்ந்து பட்டினி. பாலில்லாத வெறும் உப்புத் தேநீர் மட்டுமே உணவு.

இந்நேரத்தில்தான், ரஞ்சன் ஜியோட்ஷி என்ற புலம்பெயர் காஷ்மீர் பண்டிட் அங்கே வருகிறார். அந்தக் குடும்பத்தின் துயர நிலையைக் கேள்விப்படுகிறார். உடனே, களத்தில் இறங்கி, தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து காப்பாற்றுகிறார்.
அதோடு நில்லாமல், அந்தக் குடும்பத்தின் நிலையை வீடியோ எடுத்து, மெளசுதீனின் வங்கி கணக்கு விபரங்களையும் சேர்த்து, முகநூலில் பதிவிடுகிறார்.

உடனே, நாலாப்பக்கங்களில் இருந்தும் உதவிகள் குவிகின்றன. வங்கிக் கணக்கில் ரூ.17,00,000 சேர்ந்து விடுகிறது. இந்த உதவியால் திக்குமுக்காடி போகிறது அந்தக் குடும்பம்.

சில நாட்களில், வயோதிகர் மெளசுதீன் மாரடைப்பால் இறந்துவிட்டாலும், சிறைக்குச் சென்ற அவரின் மகன் ஃபயாஸும் வந்துவிட, இப்போது அந்தக் குடும்பத்திற்கு பிரச்சினையில்லை.

மதங்களைக் கடந்த மனிதம் காஷ்மீரில் நிரூபிக்கப்பட்டுள்ளது!

– மதுரை மாயாண்டி