whatsapp-logo-color-symbol
பவேரியா:
‘வாட்ஸ் அப்‘ ஆண்டு சந்தாவை ரத்து செய்வதாக அந்நிறுவன முதன்மை செய்ல் அதிகாரி அறிவித்துள்ளார்.
பவேரியாவில் நடந்த ஒரு மாநாட்டில் பேஸ்புக் நிறுவனத்தில் மெசேஜிங் சர்வீஸை வழங்கும் ‘வாட்ஸ் அப்’ நிறுவன முதன்மை செயல் அதிகாரி ஜான் கோவ்ம் பேசுகையில், ‘‘வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு முதல் ஆண்டு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு டாலர் சந்தா கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கட்டணம் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது.
இதற்கு பதிலாக வருவாயை ஈட்டும் வகையில் தொழில் நிறுவனங்களுக்கும் தனி நபருக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் வருவாய்க்கு முன்னுரிமை அளிப்பது கிடையாது’’ என்றார்.
இந்நிறுவன பிளாக்ஸ்பாட்டில்‘‘ இந்த அறிவிப்பின் மூலம் சந்தா இல்லாமல் எப்படி செயல்படும். மூன்றாம் நபர் விளம்பரங்கள் வாட்ஸ் அப்பில் இடம் பெறும் என்ற எண்ணம் தேவையில்லை. மாறாக நீங்கள் விரும்பும் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படும். அதாவது, உங்களது வங்கி கணக்கில் இருந்து யாரும் தவறுதலாகவோ, அல்லது திருடும் நோக்கத்தில் பணத்தை எடுப்பது தெரியவந்தால், அதை நீங்கள் வங்கியுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஏர்போர்ட்டில் விமான தாமதம் குறித்து அறிந்து கொள்ளலாம். இது போன்ற தகவல்களை தான் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்களை இப்போது இருந்தே பெற முடியும். இந்த இயக்கத்தை எளிமைபடுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.