vadivelu
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்துக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்தார் நடிகர் வடிவேலு. விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தாலும் இதை தனக்கு எதிரான பிரச்சாரமாகவே கருதினார் ஜெயலலிதா. வடிவேலுவுக்கு கூடும் கூட்டத்தை பார்த்து, நிச்சய வெற்றி கனவில் இருந்தனர் திமுகவினர். ஆனால் நிலைமை மாறிப்போனது. அதிமுக வெற்றி பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். இதில், வடிவேலுவின் நிலைமைதான் பரிதாபத்துக்குரியதாகிவிட்டது. ஆளுங்கட்சிக்கு பயந்து ஒருவரும் வடிவேலுவை வைத்து படம் இயக்கவில்லை. செம பிஸி்யாக இருந்து வந்த வடிவேலு ஐந்து வருடங்களாக ப்ரீயாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் வடிவேலு பேசுகையில், காணாமல போன நடிகர் சங்கம் கிடைத்து விட்டது. ரூ.26 கோடி செலவில் புதிய நடிகர் சங்கம் கட்டப்படும் ’’எனக் கூறினார்.
பின்னர் வெளி்யே வந்த அவரிடம் செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு, ‘’இந்த தேர்தலிலும் விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்வீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொல்லாமல் மழுப்பினார் வடிவேலு. செய்தியாளர்கள் விடாப்பிடியாக, அதே கேள்வியை கேட்கவும், தெரித்துப் போய் காரில் ஏற முயன்றார். செய்தியாளர்களும் நெருக்கியடிக்கவும், நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை தடுத்து வடிவேலுவை காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்.