டில்லி

த்திய அரசு விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளிடம் இணைய தளம் மூலமாக பிரதமர் மோடியின் சாதனைகள் பற்றி தகவல் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணம் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   அத்துடன் நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.   உள்நாட்டு விமானப் பயணச் சேவைகளை அதிக அளவில் தனியார் விமான நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.

மத்திய அரசின் விமானத் துறை அமைச்சகம் சார்பில் அமைச்சர் சுரேஷ் பிரபு தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.   அந்த கடிதத்தில் ”பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு பெருமளவில் உதவி செய்துள்ளது.

மத்திய அரசின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களால் தற்போது விமானப் பயணிகள் பெருமளவில் அதிகரித்துள்ளனர்.   இதனால் இந்திய விமான நிறுவனங்கள் பெருமளவில் பயன் அடைந்துள்ளன.   அந்த நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தற்போது நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய அரசின் திட்டங்களால் பயன் பெற்றுள்ள விமான நிறுவனங்கள் மோடியின் சாதனைகள் குறித்த விவரங்களை பயணிகள் அறியுமாறு தங்கள் இணைய தளத்தில் விவரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

அரசு இந்த விவரங்களை பயணிகளுக்கு நேரடியாக தெரிவிக்க வசதியாக விமான நிறுவனங்களுக்கு பயணிகள் எழுதும் ஈ மெயில் உள்ளிட்ட விவரங்களையும் அரசுக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்  கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு விமான நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.  இது குறித்து தனியார் விமான நிறுவன அதிகாரி ஒருவர், “தனியார் விமான நிறுவனங்கள் அவ்வாறு செய்தியை அளிப்பது முடியாத காரியம்.  எங்கள் பயணிகள் அது போன்ற  அரசு தகவல்களை அவர்களிடம் திணிப்பதை விரும்ப மாட்டார்கள்.

அத்துடன் பயணிகளின் ஈ மெயில் உள்ளிட்ட முகவரிகளை நாங்கள் அரசுக்கு தெரிவித்தால் நாங்கள் பயணிகளின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் ” என தெரிவித்துள்ளார்.