400px-Loeffler
காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கடந்த 1858-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. வேடந்தாங்கல் ஏரியின் நடுவில் கருவேல மரங்களும், கடம்ப மரங்களும் அதிகம் இருக்கின்றன. ஏரியில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது, இம் மரங்களில் தங்கி கூடு கட்டி வாழ்வதற்குத் தகுந்த சூழல் நிலவுவதால், வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரம் மைல்கள் தாண்டி பறவைகள் இங்கு வந்து செல்கின்றன.
இங்கு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி, மே மாதம் வரை பருவ காலமாக இருக்கும். அப்போது பறவைகள் இங்கு வந்து தங்கி இனவிருத்தி செய்து வம்சத்தைப் பெருக்கிக் கொள்ள சாதகமான சூழல் நிலவுகிறது.
இந்த ஆண்டுக்கான சீசன் தொடங்கி, சரணாலயம் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது. வட கிழக்குப் பருவ மழையால் அதிக அளவில் நீர் இருப்பதாலும், சூழ்நிலை பறவைகளுக்குச் சாதகமாக அமைந்துள்ளதாலும் சுமார் 33,360 வெளிநாட்டுப் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன.
இச் சரணாயத்துக்கு சிங்கப்பூர், ரங்கூன், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து நத்திகொத்திநாரை, சாம்பல் நாரை, வக்கா, நீர்க் காகம், கூழைக்கடா, பாம்புத்தாரா, ஊசிவால் வாத்து, சிறிய வெள்ளைக் கொக்கு, உண்ணி கொக்கு, கரண்டிவாயன், புள்ளிமூக்கு வாத்து, நீளச் சிறகு வாத்து, தட்டவாயன், நாமக்கோழி, மீன்கொத்தி நாரை உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன. எனவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது. சீசன் தொடங்கியது முதல் இதுவரை 75,000 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர்.