movie-image-ajith-lakshmi-menon-in-vedalam-569

“தீபாவளிக்கு வராது… இல்லயில்ல.. வருது.. ஊஹூம், தீபாவளிக்கு முன்னாலேயே வருது” என்று பலதரப்பட்ட தகவல்கள் அஜீத்தின் வேதாளம் ரிலீஸ் பற்றி. ஆனால் இப்போதோ.. படம் வெளியாகுமா.. எப்போது என்கிற திகிலில் இருக்கிறது தயாரிப்பு தரப்பு.

காரணம் என்ன?

ஏ.எம்.ரத்தினம் தயாரித்த இந்த படத்தின் சென்னை ஏரியாவை மட்டும் (தற்போது ஃபீனிக்ஸ் மால் விவகாரத்தில் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் உடன் பிறவா சகோதரியின்) ஜாஸ் சினிமாஸ் வாங்கியிருப்பதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. செங்கல்பட்டு விநியோக உரிமையை ரெட்கார்ப்பெட் ஸ்டுடியோஸ், கோவைப்பகுதிக்கு சர்வம் சினிமாஸ், வட, தென் ஆற்காடு பகுதிகளில் பாண்டிசுரேஷ், டிடி பகுதிக்கு எஸ்.பி.சுப்பையா, சேலத்துக்கு 7ஜி பிலிம்ஸ் சிவா, டிகேவுக்கு சேகர் ஆகியோர் வாங்கியிருப்பதாகவும் சொன்னார்கள்.

ஆனால், பிறகு நடந்தது வேறு. சென்னை வெளியீட்டு உரிமையை மட்டும் வைத்திருந்த ஜாஸ் சினிமாஸ் பிறகு, ஒட்டுமொத்த தமிழக உரிமையையும் வாங்கிவிட்டதாம்..!

தற்போது ஃபீனிக்ஸ் விவகாரம் வெடித்திருக்கும் நிலையில், பலவித சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தங்களது உரிமையை வேறு நபருக்கு கைமாற்றலாமா, தாங்களே வெளியிடலாமா என்று ஜாஸ் தரப்பில் பலவித ஆலோசனைகள் பரபரப்பாக நடந்துவருகிறதாம்.

ஆகவேதான் தயாரிப்பு தரப்பு, கொஞ்சம் ஜெர்க் ஆகியிருக்கிறது. ஆனாலும், “இந்த படத்தை ஜெயா தொலைகாட்சி வாங்கி இருக்கிறது. தவிர ஆளும் தரப்பு மேலிடத்துக்கு அஜீத் மீது நல்ல மரியாதை உண்டு. ஆகவே வெளியீட்டில் எந்த சிக்கலும் இருக்காது” என்று சமாதானப்படுத்திக்கொள்கிறது அஜீத் தரப்பு.

என்றாலும், வேதாளம் ரிலீஸ் தொடர்பாக “பக் பக்” மனநிலையிலேயே தொடர்கிறது என்பதே தற்போதைய நிலவரம்.