ராஜ்தாக்கரே
(எம்.என்.எஸ்) கட்சித்தலைவர் ராஜ்தாக்கரே

மும்பை:
மகாராஷ்டிராவில் பிறக்காத வேற்று மாநிலத்தவர்களுக்கு புதிய ஆட்டோ பெர்மிட் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த ஆட்டோக்களை தீ வைத்துக் கொளுத்துமாறு தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்) கட்சித்தலைவர் ராஜ்தாக்கரே ஆவேசக் கட்டளை பிறப்பித்துள்ளார்.
‘மகாராஷ்டிரா  மராத்தியருக்கே’ என்ற அடிப்படையில் மண்ணின் மைந்தர்கள் என்ற வெறுப்புக் கொள்கையை முன்வைத்து அரசியல் நடத்தி வருபவர் ராஜ்தாக்கரே. இவருடைய வெறுப்புமிக்க பேச்சால் மும்பை நகரம் பலமுறை கலவரக்காடாய் மாறியிருக்கிறது. தற்போது,அதேபோல் மீண்டும் சர்ச்சைக்குரிய ஆவேச உரை நிகழ்த்தியுள்ளார்.
மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா புதன்கிழமையன்று மும்பையில் நடைபெற்றது. அதில் அக்கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே பேசியதாவது:-
மகாராஷ்ட்ராவின் ஆளும் பாஜக அரசு, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொண்டுள்ளது.. இந்த நிறுவனத்திடமிருந்து 70 ஆயிரம் புதிய ஆட்டோக்களை 1,190 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளது. இதில் பெரும் தொகை  ஆளும் கட்சிக்கு கை மாறியிருக்கிறது.
70 ஆயிரம் புதிய ஆட்டோக்களைப் பெற்றிருப்பவர்களில் 70 சதவீதம்பேர் வெளி மாநிலத்திலிருந்து இங்கு பிழைக்க வந்தவர்கள்.. இந்த மண்ணில் பிறந்த ஆணும் பெண்ணும் அரசின் நலத்திட்ட உதவியை பெறுவதற்கான வழி தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் வேலைவாய்ப்பு இதனால் பறிபோகும்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் புதிய பெர்மிட் பெற்று வெளிமாநிலத்தவர் ஓட்டும் ஆட்டோக்கள் உங்கள் கண்களில்பட்டால் ஆட்டோக்களிலிருந்து பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு அந்த ஆட்டோக்களை நமது கட்சி உறுப்பினர்கள் தீ வைத்துக் கொளுத்த வேண்டும் என்றார்..  இவ்வாறு ராஜ்தாக்கரே பேசியிருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு மும்பை மற்றும் புனேயில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களை தம்பக்கம் ஈர்ப்பதற்காக ராஜ்தாக்கரே இந்த வன்முறைப் பேச்சினை நடத்தியிருப்பதாக கருதப்படுகிறது.