v

“ஏதேன்ஸ் நாட்டிலே…” என்று ஆரம்பித்தாராயின், அடுக்கடுக்கான தகவல்கள், புள்ளி விவரங்கள் கொட்டும், வைகோவின் பேச்சிலே. ஆனால், தான் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளுக்கு அவர் கொடுக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்பதுதான் சோகம்.

சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அவர் சொன்ன பல விசயங்கள் அப்படித்தான்.

அன்று அவர் பேசியதும் நாம் கேட்க நினைத்த கேள்விகளும்.

வைகோ:

“எப்போதுமே தி.மு.க. எங்களை அழிக்கவே நினைக்கிறது. ஆகவே எந்த ஒரு சூழ்நிலையிலும் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க நான் விரும்பவே இல்லை.

பாஜக  தலைமையில் நாங்கள் இருந்த கூட்டணிக்கு தி.மு.க.தான் வந்தது.  அப்போதே விலக முற்பட்டோம். ஆனால் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், தடுத்துவிட்டார்.

நமது கேள்வி:

இதற்கு சாட்சி வாஜ்பாயும், வைகோவும்தான்.  வைகோ சொல்கிறார். வாஜ்பாய் சொல்ல முடியாத நிலையில் முதுமையில் இருக்கிறார்.    உங்களது கட்சியின் எதிர்காலம் குறித்தான முடிவை, கொள்கை ரீதியான முடிவை..  இன்னொரு கட்சியின் வாஜ்பாய் சொல்வதை வைத்து எடுப்பது அரசியல் வியூகமா…

 

வைகோ:

அடுத்தும் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க நேர்ந்ததற்கு நான் காரணமல்ல. அப்போது நான் சிறையில் இருந்தேன். அந்த நேரத்தில் அப்போது ம.தி.மு.க.வின் அவைத்தலைவராக இருந்த எல். கணேசன் தனது சுயநலத்துக்காக தி.மு.க.வுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டார். என்னால் ஏதும் செய்யமுடியவில்லை..

நமது கேள்வி: 

தகவல் தொடர்பு கொள்ள முடியாத பாதாள சிறையிலோ, தீவாந்திர சிறையிலோ நீங்கள் இல்லை. தமிழகத்து சிறையிலே இருந்தீர்கள். பலரும் உங்கiளை தினமும் சந்தித்தார். அவர்கள் மூலம் உங்களது எண்ணத்தை செயல்படுத்தி இருக்கலாம். அல்லது எல்.கணேசன் முடிவு கட்சியின் முடிவல்ல என்ற அறிவித்திருக்கலாம். நீங்கள் சிறையில் இருந்தாலும், உஹ்கள் சொல்லை அப்படியே செயற்படுத்தும் ஒருவர் கூடவா கட்சியில் இல்லை?

 

வைகோ:

அ.தி.மு.கவுடனான கூட்டணியிலும் எனக்கு விருப்பம் இல்லை.  ஆகவேதான் அந்த சமயத்தில் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

நமது கேள்வி:

கட்சியின் தலைவர் நீங்கள். (பொதுச் செயலாளர் என்பது சம்பிரதாயம்) அப்படியானால் கட்சி வேறு நீங்கள் வேறு அல்ல. அப்படி இருக்கையில் எப்படி உங்களால் பிரித்துப்பார்க்க முடிகிறது.

தவிர பிடிக்காத கூட்டணி என்று இப்போது சொல்லும் நீங்கள், கூட்டணி சமயத்திலெல்லாம் அந்தந்த கூட்டணி தலைவர்களை அத்தனை புகழ்ந்தீர்களே.. எப்படி அது முடிந்தது?

 

வைகோ:

தற்போதைய மக்களுக்கான கூட்டியக்கத்தில் ம.ம.கவையும் சேர்த்து கூட்டணி என்பதை, அந்த கட்சி விரும்பவில்லை.  இப்படி அறிவிக்கக் காரணம் இந்திய கம்யூனிஸ்டு தமிழக செயலாளர் முத்தரசன்தான்.

அனைத்து தலைவர்களும் கூட்ட மேடையில் கைகளை உயர்த்திப் பிடித்து போஸ் கொடுத்தோம். அப்போது முத்தரசன், மக்களுக்கான இந்த கூட்டணியே தேர்தலில் நிற்கட்டும். என்ன சொல்றீங்க என்று கேட்டார். நானும் உடன்பட்டுவிட்டேன். அதே போல ம.ம.க. தலைவர் ஜிவாஹிருல்லாவும் உடன்பட்டார் என்று நினைத்தே அப்படிச் சொன்னேன்.

நமது கேள்வி:

மாதக்கணக்கில் பேசி, கூட்டணி அறிவித்த பிறகு.. நாட்கணக்கில் பேசி தொகுதி ஒதுக்கீடு பிரச்சினை வந்து கூட்டணியைவிட்டு விலகிய அனுபவம் உண்டு. அப்படி இருக்கையில் விநாடி நேரத்தில் அவர் கேட்க.. நீங்கள் தலை அசைக்க கூட்டணி உருவானது என்பதை நம்ப முடியவில்லையே..

 

வைகோ:

தி.மு.க.வுடன் கூட்டணி என்று நான் எப்போதும் சொல்லவில்லை. கருணாநிதி தானாக என்னை செல்போனில் தொடர்புகொண்டு, தமிழரசு மகன் திருமணத்துக்கு பத்திரிகை வைக்க ஸ்டாலின் வருவார் என்று சொன்னார். தமிழர் நாகரீகத்தின் படி வரட்டும் என்றேன். வந்தார்கள். நமது பாரம்பரியப்படி வரவேற்றேன். அதே போல திருமணத்துக்குச் சென்று வாழ்த்தி பேசினேன்.

நமது கேள்வி:

உங்கள் பண்பாடு பாராட்டத்தக்கது.  ஆனால், உங்கள் கட்சியிலிருந்து விலகிய கலைப்புலிதாணு “  எனது குடும்ப விழாவுக்கு (திருமணம்) கருணாநிதி, ஜெயலலிதாவை அழைத்தது வைகோவுக்கு பிடிக்கவில்லை” என்றாரே.. 

கட்சியிலிருந்து விலகிய கண்ணப்பன், “உடல் நலிவுற்றிருந்த கருணாநிதியை மரியாதை நிமித்தம் நலம் விசாரித்தேன். அது வைகோவுக்குப் பிடிக்கவில்லை” என்றாரே…

உங்களுக்கான அதே நாகரீகத்துடன் அவர்கள் நடந்துகொள்வதை ஏன் அனுமதிக்கவில்லை?

ன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன என்ற போதும் இப்போதைக்கு இது போதும்.

சரி, வைகோவை நேரில் சந்தித்து கேட்பதுதானே பத்திரிகையாளருக்கு அழகு(!) என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். .

சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் நாமும் கலந்துகொண்டோம். தனது கட்சியிலிருந்து விலகியவர்களை “பலவீனமானவர்கள், எதற்கோ ஆசைப்பட்டுவிட்டார்கள்” வைகோ விமர்சித்தார்.

கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் அதிகமாக விலகியது மதிமுகவில்தான்.  அதுவும் கட்சி துவங்கியதில் இருந்து இன்று வரை சீராக விலகல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

ஆகவே, “விலகியவர்களை விமர்சிக்கிறீர்கள். சரி,  அப்படிப்பட்டவர்களுக்கு ஏன் பொறுப்புகளை கொடுத்தீர்கள்” என்றோம்.

இந்த கேள்வியாக் கோபமான வைகோ, “நான் என்ன கடவுளா.. இயேசுவுக்கே தன் சீரடர்களில் ஒருவன் துரோகியாக இருப்பான் என்பது தெரியவில்லை.. நான் சாதாரண மனிதன்” என்று கோபமாக சொன்னவர், “சரி, கேள்விகள் போதும்” என்று பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.

அதன் பிறகு பத்திரிகையாளர்கள் வற்புறுத்தலால் டி.எஸ்.பி. விஸ்ணுப்ரியா பற்றிய கேள்விக்கு சுருக்கமாக பதில் அளித்தார். தவிர, தொண்டர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்ததால் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியிருப்பதாகவும் சொன்னார்.

சரி அதனால் என்ன..  அரசியல்தலைவர்கள் மட்டும்தான் அறிக்கைவிட்டு கேள்வி கேட்க வேண்டுமா.. நாமும் கேட்டு வைப்போமே என்பதற்காகத்தான் இந்த கேள்விகள்.

வைகோவின் பார்வைக்கு இந்த கேள்விகள் சென்றால்,   பதில் சொல்ல அவருக்கு நேரம் அமைந்தால், சொல்லட்டும்.  அப்படியே பிரசுரிப்போம்.