ஸ்ரீ மலர்மங்கை தாயார் (சிறுதேவி) ஸமேத நாவாய் முகுந்தன் திருக்கோவில்

ஊர் :- மலப்புரம்,கேரளா.

பாலக்காடு – கோழிக்கோடு செல்லும் ரயில் பாதையில் குத்திப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 15 கிமீ தூரம்
நம் பெருமாளின் 108 திவ்வியதேசங்களில் இதுவும் ஒன்று.

முன்னொரு காலத்தில் மஹாலக்ஷ்மியும், கஜேந்திரனும் தாமரைப்பூக்களைப் பறித்து பெருமாளைப் பூஜித்து வந்தனர். இதில் ஒருமுறை கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்குப் பூக்கள் கிடைக்காமல் போனது. இதனால் வருத்தமடைந்த கஜேந்திரன் பெருமாளிடம் தனது நிலையைக் கூறி வருத்தப்பட்டான். உடனே பெருமாள் லக்ஷ்மி தேவியை அழைத்து, “இனிமேல் பூப்பறிக்க வேண்டாம். கஜேந்திரனுக்காக விட்டுக்கொடு” என்று கூறினார். லக்ஷ்மியும் அதன்படி செய்தாள்.
இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் தினமும் ஏராளமான பூக்களைப் பறித்து, பெருமாளை அர்ச்சித்து வந்தான். பூஜையின் போது பெருமாள், லக்ஷ்மி தேவியை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து கஜேந்திரனின் பூஜையை ஏற்றுத் தரிசனம் தந்ததாகப் புராண வரலாறு கூறுகிறது.
கேரளாவில் இந்த ஸ்தலத்தில் மட்டும் தான் லக்ஷ்மிக்குத் தனி சன்னதி உண்டு என்கிறார்கள். ஒரு முறை 9 யோகிகள் சேர்ந்து பெருமாளை நினைத்து தவம் செய்துள்ளனர். எனவே இத்தலம் “நவயோகிகள் தலம்” என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் “நாவாய்த்தலம்” ஆனது. இதை தற்போது “திருநாவாய்” என அழைக்கிறார்கள்.
காசியில் நடப்பதைப் போல இத்தலத்தில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் கொடுக்கிறார்கள். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.
திருமங்கையாழ்வார் இத்தலத்தை திருக்கோஷ்டியூருக்கும் திருநாரையூருக்கும் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார்.
நம்மாழ்வாரால் போற்றி பாடல் பெற்ற திவ்யதேசமாகும்