ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு திருச்செந்தூர் பகுதியில் உள்ள 13 பெட்ரோல் பங்குகளிலும், 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.

விபத்துகளை குறைக்கும் வகையிலும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட போலீசார் மற்றும் பெட்ரோல் பங்க் அசோசியே‌ஷன் இணைந்து ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்கிற்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்குவது இல்லை என்ற புதிய முயற்சியை நாளை தொடங்க உள்ளனர். திருச்செந்தூர், குலசேகரன் பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் முன்னோட்டமாக திருச்செந்தூர் பகுதியில் உள்ள 13 பெட்ரோல் பங்குகளில் “மகிழ்ச்சி நேரம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதன்படி இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை ஹெல்மெட் அணிந்து வந்த முதல் 30 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. இதேபோல் மாதத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் 12 மணி வரை ‘மகிழ்ச்சி நேரம்’ என்ற தலைப்பில் இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட இருக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தொடங்கி வைத்தார்.