அகமதாபாத்: இங்கிலாந்து அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில், தனது முதல் இன்னிங்ஸில், முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 1 விக்கெட் இழந்து 24 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலையில், இங்கிலாந்தைவிட 181 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 205 ரன்களைச் சேர்த்தது. பின்னர், தனது முதல் இன்னிங்‍ஸை இந்தியா தொடங்கிய நிலையில், ரன் எடுப்பதற்கு முன்னரே, ஷப்மன் கில் விக்கெட் காலியானது.

பின்னர், ரோகித்தும் புஜாராவும் இணைந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதுடன், நிதானமாக ஆடத் தொடங்கினர்.

இன்று 34 பந்துகளை சந்தித்த ரோகித், 8 ரன்களை அடித்துள்ளார். 36 பந்துகளை சந்தித்த புஜாரா 15 ரன்களை அடித்துள்ளார். இந்த இணை, நாளை சற்று நிலைத்து நின்று ஆட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 350 ரன்களுக்கு மேல் எட்டினால், இங்கிலாந்துக்கு பெரிய நெருக்கடியை கொடுக்கலாம்.