புதுடெல்லி: இந்தியாவுக்கு உடனடியாக ஒரு புதிய நிதியமைச்சர் தேவை என்ற கருத்தை முன்வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பத்திரிகையாளர் சந்திப்பை தொடர்ந்து இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது, உலகளாவிய பொருளாதார மந்தநிலை நிலவியபோதும், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார் நிதியமைச்சர்.

இதனையடுத்துதான் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் ஜா, நாட்டிற்கு உடனடியாக ஒரு புதிய நிதியமைச்சர் தேவை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அமெரிக்கா மற்றும் சீனாவை விட அதிகமாக உள்ளதென்று கூறியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால், மேடம், அமெரிக்காவின் பொருளாதாரம் 21 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலானது. சீனாவின் பொருளாதாரம் 14.8 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலானது.

எனவே, அவற்றை எப்படி இந்திய பொருளாதாரத்துடன் நீங்கள் மதிப்பிடுகிறீர்கள்? நமது பொருளாதார மதிப்பு வெறும் 2.8 டிரில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே” என்றுள்ளார்.