புதுடெல்லி: மூளைச்சவ்வு வீக்க நோய்க்கான தடுப்பூசி மருந்தை இந்திய நிறுவனங்களால் சீன நிறுவனங்களுடன் போட்டிப்போடும் வகையில் உற்பத்தி செய்ய இயலாத நிலை உள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு இந்திய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘பயாலஜிகல் இ’ நாட்டின் முதல் ஜப்பானிய மூளைச்சவ்வு வீக்க நோய் தடுப்பு மருந்தை ‘ஜீவ்’ என்ற பெயரில் அறிமுகம் செய்தது. அந்த தடுப்பு மருந்து, 4 வார இடைவெளியில் இரண்டு அளவுகளாக வழங்கப்படவுள்ளது.

மூளைச்சவ்வு வீக்கம் என்பது ஒரு வைரல் நோயாகும். இது மனிதனையும் விலங்குகளையும் பாதிக்கிறது. கொசுக்களால் இந்த வைரஸ் கிருமிகள் பரவுகின்றன.

இந்த நோய் தொற்றக்கூடிய வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் சுமார் 6 கோடி மக்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டிற்கு 1500 முதல் 4000 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை சீன நிறுவனமான சிடிஐபிபி, இந்திய நிறுவனங்களைவிட விலை மலிவாக தருகிறது. எனவே, இந்திய அரசாங்கம் சீனாவிலிருந்தே இந்த மருந்தை இறக்குமதி செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுகள் பலவாகியும் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சீன நிறுவனத்தை தோற்கடிக்கும் அளவிற்கு போட்டியிடும் வகையில் வளர்த்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘மேக் இந்தியா திட்டம்’ இந்த விஷயத்தில் என்னவானது என்ற கேள்வி எழுந்துள்ளது.