புதுடெல்லி: இந்திய டென்னிஸ் விளையாட்டில் வயது தொடர்பான மோசடிகளைத் தவிர்க்க, தேசியளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து ஜூனியர் வீரர்-வீராங்கனைகளும் வயது உறுதித்தன்மை சோதனையில் பங்கேற்க வேண்டுமென முடிவு செய்துள்ளது அகில இந்திய டென்னிஸ் அசோசியேஷன்().
இந்த நடைமுறை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருக்க வேண்டுமென கூறியுள்ளார் இந்திய டென்னிஸ் நட்சத்திரங்களில் ஒருவரான மகேஷ் பூபதி.
மேலும், இந்தியாவிற்காக ஜூனியர் டேவிஸ் கோப்பை மற்றும் ஃபெட் கோப்பை டென்னிஸ் போட்டிகளில் ஆடுவதற்கு தேர்வு செய்யப்படுவோரும் இந்த வயது சோதனைக்கு உள்ளாக வேண்டுமென கூறப்படுகிறது.
சண்டிகர் டென்னிஸ் அசோசியேஷன் வளாகத்தில், வயது முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 ஜூனியர் வீரர்கள் பிடிபட்டதாலேயே இந்த விதிமுறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் புதிய விதியின்படி, இனிமேல், தேசியளவிலான டென்னிஸ் போட்டியில், 12 வயதுக்கு கீழ், 14 வயதுக்கு கீழ் மற்றும் 16 வயதுக்கு கீழ் என்ற பிரிவுகளில் பங்கேற்பவர்கள், வயது பரிசோதனைக்கு உட்பட வேண்டும். இதுவொரு மருத்துவப் பரிசோதனையாகும்.
இந்த நடைமுறை முன்பே பின்பற்றப்பட்டு வந்தது. பின்னர் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.