துபாய்: மூன்று முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கிரிக்கெட் வாரியங்கள் என்ற கருத்தாக்கத்தில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளார் புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஐசிசி தலைவரான நியூசிலாந்தின் கிரெக் பார்க்லே.

தற்போதைய நிலையில், கிரிக்கெட் உலகில், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள்தான் ஐசிசி அமைப்பின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்நிலையில், பார்க்லேயின் கருத்து அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

அவர் கூறியுள்ளதாவது, “என்னைப் பொறுத்தவரை உலகின் 3 பெரிய வாரியங்கள் என்பதெல்லாம் கிடையாது. எல்லாருமே முக்கியமானவர்கள் மற்றும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு தேசத்தாலும் ஒவ்வொரு வகையில் இந்த ஆட்டத்துக்குப் பங்காற்ற முடியும்.

ஆனால், எல்லோரும் இணைந்துதான் பணியாற்ற வேண்டும். அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். பெரிய தொடர்களை நடத்துவது, நிறைய வருவாய் உருவாக்குவது போன்ற சில விஷயங்களை, சில பெரிய தேசங்களால் தர முடியும். ஆனால் அதற்காகத் தனியாக பெரிய 3 வாரியங்கள் என்றெல்லாம் நினைக்க முடியாது” என்றுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இன்னும் ஒரு கிரிக்கெட் அணி பங்கேற்கும் சூப்பர் சீரிஸ் என்கிற தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இது நடந்தால் பங்குபெறும் அனைத்து நாடுகளுக்கும் வருவாய் ரீதியில் அதிகப் பயனைத் தரும். ஐசிசி, சர்வதேசத் தொடர்களின் மூலம் அதிக வருமானம் பெறுகிறது.

எனவே, இந்த சூப்பர் சீரிஸுக்கு, ஐசிசி அனுமதி அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது புதிய தலைவர் பார்க்லேவின் இந்தக் கருத்துக்குப் பிறகு, இந்தத் தொடர் நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.