சென்னை: தமிழ்நாடு நூலகத் துறையில், தினக்கூலி முறையில் பணியாற்றும் 3,500க்கும் மேற்பட்டோருக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுவில்; பொது நுாலகத் துறையில், தினக்கூலி அடிப்படையில் 1,000க்கும் மேற்பட்ட நுாலகர்கள், 2,500க்கும் அதிகமான துாய்மைப் பணியாளர்கள் ஆகியோர் பணிசெய்து வருகின்றனர்.
அவர்களுக்கு, ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை கிடைக்கவில்லை. தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியம் இல்லையென வாய்மொழிவு உத்தரவு பிறப்பித்துள்ளனர் அதிகாரிகள்.
ஊரடங்கு நடைமுறையால் ஊதியத்தை நிறுத்தக்கூடாது என்று அரசு அறிவித்திருந்தாலும், அதையும் மீறி நுாலக நிர்வாகம் ஊதியம் வழங்க மறுத்துள்ளது. இதனால் 3,500க்கும் அதிகமான தினக்கூலி முறை நுாலகப் பணியாளர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது.
ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள பல குடும்பங்கள், தற்போது கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளன. அதனால், ஏப்ரல் ஊதியத்தை வழங்குவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிலையில், அடிமட்டத்தில் உள்ளவர்களின் வயிற்றில் அடிக்கும் போக்கு, பல மட்டங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.