புதுடெல்லி: இந்திய வான்பரப்பில் விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் இந்திய விமானப் படையால் விலக்கிக்கொள்ளப்படும் என்று வெளியான தகவலையடுத்து, பாகிஸ்தான் தரப்பிலும் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரின் புலவாமா தாக்குதலையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே எழுந்த பிரச்சினைகளை ஒட்டி, இருநாடுகளின் வான் எல்லைகளும் கடந்த பிப்ரவரி 27ம் தேதி முதல் மூடப்பட்டன. பாகிஸ்தானின் வான் வழி மூடப்பட்டதால், மேற்கு நாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

தற்போது தேர்தல் முடிவுகளில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததையடுத்து, இந்திய வான்பரப்பில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி முதல் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து பேசிய பாகிஸ்தான் அரசின் மூத்த அதிகாரி ஒருவர், “இந்தியா சார்பில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டால், பாகிஸ்தானும் அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆனால், இந்தியாவின் முடிவு குறித்த தகவல்கள் தற்போது ஊடகங்களில்தான் வெளிவருகின்றன.

ஆனால், இந்திய தரப்பிலிருந்து பாகிஸ்தானுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை. பாகிஸ்தானுக்கு முறைப்படி தகவல் வந்த பின்னரே, பாகிஸ்தான் வான்பரப்பில் விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.