சென்னை:

மிழகத்தில் அவசர ஆம்புலன்ஸ் சேவை பெற 108 என்ற உதவி எண் புழக்கத்தில் உள்ள நிலையில், தற்போது கொரோனா நோயாளிகளின் வசதிக்காக மேலும் ஒரு புதிய ஹெல்ப்  போன் எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 044-4006 7108 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இல்லாமல் விரைவாக பெற முடியும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில்,  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசு,  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் சிகிச்சைகள் மேற்கொள்ளவும், அவ்வப்பொழுது மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகளை நாள்தோறும் எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் 108 அவசரகால ஊர்தி சேவை 24 மணி நேரமும் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், கோவிட்-19 நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள கூடுதல் பளுவையும் திறம்பட சமாளித்து வருகிறது.

இச்சவாலான சூழ்நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைப்படுத்தவும் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் அழைப்புகளை கையாளும் விதமாகவும், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் அழைப்பை உடனடியாக ஏற்று அப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை விரைந்து அனுப்பவும், கோவிட்-19 நோய் தொற்றுக்கென பிரத்யேகமாக ஒரு கட்டுப்பாட்டு அறையை உருவாக்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேவையில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறை, 10 தொலைபேசி இணைப்புகளுடன் 24 மணி நேரமும் செயல்படும்.

சென்னையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044-4006 7108 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இல்லாமல் பெறுவதற்கு ஏதுவாக அமையும்.

இதன் மூலம் கொரோனா கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை முறைகள் மேலும் தமிழ்நாட்டில் வலுப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.