மதுரை: கொரோனா நோயாளிகளுக்காக கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் தொடங்கப்பட்டு உள்ளது.

கடந்த காலங்களை விட கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு குறைந்தாலும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறும் நோயாளிகள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளில் பலர் கழிப்பறை செல்லும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கழிப்பறைகளில் நோயாளிகள் சவாசிக்க போதுமான சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்காததால் அவர்கள் உயிரிழக்கின்றனர் என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்தாகும். அரசு மருத்துவமனையில் இதுபோன்ற உயிரிழப்பு நடக்கக்கூடாது என்பதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது சென்னைக்கு அடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் உள்ள கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் சங்குமணி கூறியதாவது: மருத்துவமனை கொரோனா வார்டுகளில்  உள்ள நோயாளிகள் கழிப்பறை செல்லும்போது ஆக்ஸிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் அதிகமாக வாய்ப்புள்ளது.

ஆகவே, தீவிர தொற்று உள்ளவர்களை கழிப்பறைக்கு செல்ல நாங்கள் அனுமதிப்பதில்லை. மிதமான, அறிகுறி இல்லாத நோயாளிகள் மட்டுமே  கழிப்பறை செல்ல அனுமதிக்கிறோம். கழிப்பறை வாசல் மற்றும் உள்ளே ஆக்ஸிஜன் வாயு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆகையால் நோயாளிகளுக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் வாயு கிடைக்கும் என்று தெரிவித்தார்.