ரூ.1.20 கோடி கொள்ளை போனதாக நாடகம்: ஏடிஎம் பணம் நிரப்பும் ஊழியர்கள் 4பேர் கைது

சிவகங்கை:

சிவங்கை அருகே சாயல்குடி பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரம்பும் பாதுகாப்பு வாகனத்தில் இருந்து ரூ.1.20 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், கொள்ளை போனதாக நாடகமாடிய ஏடிஎம் பணம் நிரம்பும் நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தென் மாவட்டங்களில் உள்ள பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையங் களுக்கு பணம் நிரம்பும் பணியை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சிவங்ககை மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு நிரம்பும் வகையில் எடுத்துச் சென்ற பணம்,  கடலாடி அருகே உள்ள மலட்டாறு பகுதியில் வேன் சென்றபோது திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததாகவும், அந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வேனில் இருந்த  ரூ.1 கோடியே 20 லட்சத்தை எடுத்துச்சென்றதாகவும் கூறப்பட்டது.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சாயல்குடி காவல்துறையினர் புகார் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, பணம் நிரம்பும் வாகனத்தில் சென்ற 4 பேரையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.

இதில், அவர்கள்  4 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததால், அவர்கள்மீது சந்தேகம் அடைந்த காவலர்கள், அவர்களிடம் கடுமையாக விசாரிக்கத் தொடங்கினர். இதில், அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கிலே, வேனை கவிழ்த்து விட்டு பணத்தை எடுத்துவிட்டு,   திருடு போனதாக நாடகமாடியது தெரியவந்தது.

இதன் காரணமாக பணம் எடுத்துச்சென்ற அன்பு, வீரபாண்டி, குருபாண்டி, டிரைவர் கபிலன் உள்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.32 லட்சத்தை கைப்பற்றினர். மீதமுள்ள பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.