கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, தமிழக சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடத்த கலைவாணர் அரங்கம் தேர்வு செய்யப்பட்டது.

இதையடுத்து,  பொதுப்பணித்துறை வாயிலாக, கலைவாணர் அரங்கில், தற்காலிக சட்டசபை அமைக்கும் பணி துவங்கியது. அதன்அங்குள்ள 3வது தளத்தில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. மின்விளக்குகள், மின்விசிறி, பெயின்ட் அடித்தல், அறைகளை பிரித்து உருவாக்குதல், கழிவறைகளை மேம்படுத்துதல் உள்பட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதவிர, ஏற்கனவே திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகம், மருத்துவமனை யாக மாற்றப்பட்டதால், அங்கிருந்து அகற்றப்பட்ட  மேஜைகள், நாற்காலிகள், போன்றவை கலைவாணர் அரங்கில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

அத்துடன், சில தளவாடங்கள், கூடுதல் மைக் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டுமே, வாடகைக்கு பெறப்பட்டு உள்ளன. இந்த பணிகளுக்காக  பொதுப்பணி துறை வாயிலாக, 1.20 கோடி ரூபாயை, அரசு செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது.

கலைவாணர் அரங்கத்தில் கடந்த 14 முதல், 16ம் தேதி வரை, மூன்று நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. முதல்நாள் வெறும் அரை மணி நேரம் மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டது. அடுத்த 2 நாட்கள் மட்டும் விவாதங்கள் நடைபெற்றன. சொல்லப்போனால், 2 நாட்கள் மட்டுமே சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது.

இந்த 2 நாள் கூத்துக்காக ரூ.1.20 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவோ கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடுமையா நிதி சிக்கலில் சிக்கி உள்ள தமிழகஅரசு, சட்டமன்ற கூட்டத்துக்காக ரூ.1.20 கோடி செலவு செய்துள்ளது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.