Random image

விளைபொருள் கொள்முதல் : 1.25 லட்சம் விவசாயிகளுக்கு பணம் பாக்கி

போபால்

விளை பொருட்களை அரசுக்கு விற்ற 1.25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1100 கோடி பாக்கியை மத்திய அரசு இன்னும் தராமல் உள்ளது.

அனைத்து மாநிலங்களும் விளை பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றன.    இதற்காக குறைந்த பட்ச அரசு விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  அத்துடன் அரசு சார்பில் பல கொள்முதல் கிடங்கு திறக்கப்பட்டுள்ளன.   விவசாயிகள் தங்கள் பொருட்களை அங்கு குறைந்த பட்ச அரசு விலைக்கு விற்பது வழக்கம்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இவ்வாறு விற்கப்பட்ட விளை பொருட்களுக்கு தர வேண்டிய பணம்  ரூ. 1100 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.  இதனால் 1.25 லட்சம் விவசாயிகள் கடும் சிரமத்தில் உள்ளனர்.

உதாரணமாக  நரேந்திர பாபுல் என்னும் 32 வயது விவசாயி தனது விளை பொருளான கொத்துக் கடலையை விற்றுள்ளார்.   அவருக்கு இதுவரை தர வேண்டிய பணத்தை அரசு தராததால் அவர் தற்கொலை செய்துக் கொள்ள போவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.   அவர் கடந்த மே மாதம் மூன்று முறை விற்பனை செய்துள்ளார்.  அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டிய தொகை இரு மாதங்கள் ஆகியும் தரப்படவில்லை.

இதே போல் பல விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கான பணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.  மாநில அரசின் விவசாயப் பொருட்கள் கூட்டுறவு சங்கம் வழங்க வேண்டிய ரூ.4900 கோடியில் இதுவரை ரூ. 3600 கோடி மட்டுமே வழங்கி உள்ளது.  அதனால் தான் இந்த தாமதம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் கடுமையாக போர்க்குரல் எழுப்பி உள்ளனர்.  ம. பி.  மாநில விவசாயத்துறை அமைச்சர் சங்கர் பீசன், “சங்கத்திடம் பணம் இல்லாததால் பணம் வழங்காமல் உள்ளதாக கேள்விப் பட்டேன்.  அதனால் நாங்கள் இனி அரசு நிதியில் இருந்து நேரடியாக விவசாயிகளுக்கு பணம் வழங்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.