பிர்பும், மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தில் ஓர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண் வயிற்றில் ஏராளமான நகைகளும் நாணயங்களும் இருந்துள்ளன.

மாதிரிப் புகைப்படம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூரில் சுமார் 26 வயதுள்ள பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.    அந்தப் பெண் சிறிது மனநிலை பிறழ்ந்தவர் ஆவார்.   அவருடைய சகோதரர் ஒரு சிறு கடையை நடத்தி வருகிறார்.   இவர்களுடைய வீட்டில் அவ்வப்போது நகைகள் காணாமல் போய் உள்ளன.  இது குறித்து அந்த பெண்ணிடம் கேட்டால் அவர் அழத் தொடங்கி விடுவார்.

கடந்த சில நாட்களாக அந்தப் பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது   அந்தப் பெண் எதையும் சாப்பிடாமல் தூக்கி எறிந்துள்ளார்.  அதனால் அந்தப் பெண்ணை அவர் தாயார் அருகில்  உள்ள ராம்புர்கத் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.    அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

அப்போது அவருடைய வயிற்றில் ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்கள் 90 கிடைத்துள்ளன.  அத்துடன் பல நகைகள் வயிற்றில் இருந்துள்ளன.   சங்கிலி, மூக்குத்தி, வளையல்கள், தோடுகள், கொலுசுகள், என சுமார் 1.5 கிலோ நகைகள் கிடைத்துள்ளதாக அறுவை சிகிச்சை செய்த சித்தார்த் பிஸ்வாஸ் என்னும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.  இந்த நகைகள் செம்பு மற்றும் பித்தளையால் செய்யப்பட்டவை ஆகும்.  ஓரிரு தங்க நகைகளும் இருந்துள்ளன.

இது குறித்து அந்தப் பெண்ணின் தாய், “கடந்த சில நாட்களாகவே எங்கள் வீட்டில் நகைகள் காணாமல் போய் உள்ளன.   அத்துடன் என் மகனின் கடைகளில் சில்லறை நாணயங்களும் காணாமல் போய் உள்ளன.  நாங்கள் எத்தனை கவனமுடன் அவளைக் கவனித்த போதிலும் இவற்றை அந்தப் பெண் விழுங்கி உள்ளார்” என தெரிவித்துள்ளார்.