சென்னை:

டந்த ஆண்டு தமிழகத்தை புரட்டிப் போட்டி கஜா புயல் காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ஒன்றரை லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு (2018)  நவம்பர் 16ந்தேதி அதிகாலை கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங் களை சின்னாப் பின்னப்படுத்தி சென்றது. இதன் காரணமாக லட்சக்கணக்கான வீடுகள் மரங்கள் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின.

இந்த நிலையில், தமிழகத்தில் கஜா புயலால் வீடு இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என மத்திய மாநில அரசுகள் உறுதி அளித்திருந்தன. அதைத்தொடர்ந்து, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரக் கோரி தமிழக அமைச்சர்கள்  மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கஜா பாதித்த பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் வீடுகள் கட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ்  அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கஜா புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்த வீடுகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு  உள்ளன.

இதற்கான கணக்கெடுப்பு பணிகள் வரும் 26ந்தேதி தொடங்க உள்ளதாகவும்,  இந்த பணிகள் 15 நாட்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ .3 லட்சம் செலவாகும்  என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

இதில் மத்திய அரசு ரூ.1.5 லட்சமும், மாநில அரசு ரூ.60 ஆயிரமும், பயனாளிகள் ரூ.90 ஆயிரமும் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.