டெல்லி: நாடு முழுவதும் இன்று 1,65,714 பேருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, மற்ற மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றன.

இந் நிலையில், இன்று 1,65,714 பேருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறி உள்ளது. இது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது:

சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டன. பாரத் பயோடெக்கின் கோவேக்சின் 12 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. 2 தடுப்பூசிகளை கொண்டு நாடு முழுவதும் 3,351 அமர்வுகள் நடத்தப்பட்டன.

முதல் நாளான இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு மருத்துவமனையில் யாரும் அனுமதிக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

நாடு முழுவதும் 1,65,714 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் நாள் என்பதால் பயனாளர்களின் பட்டியலை பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது.