டெல்லி

கொரோனாத் தடுப்பு நடவடிக்கையின் போது மருத்துவப்  பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2000 தாண்டியுள்ள நிலையில் 150க்கும் மேற்பட்டோர் அந்நோயிலிருந்து மீண்டு உள்ளனர். ஆனால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் COVID-19 கண்டறியப்பட்டோரின்  சிகிச்சையில் மருத்துவர்கள்,  செவிலியர்கள் இரவு பகல் பாராமல் சேவையாற்றி வருகின்றனர். தொற்று பரவாமல் தடுப்பதில் தூய்மைப் பணியாளர்களும் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

எனவே கொரோனாத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளர்கள் எதிர்பாராதவிதமாக இறக்க நேர்ந்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்நோய்த் தடுப்பு பணியில் சேவையாற்றும் மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 50 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது…