குன்னூர்:

நீலகிரியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டியில் 1 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக  தட்பவெட்பம் நிலவுவதால் குளிர் வாட்டி வருகிறது.

நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும்  உறைபனி காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருகி வருகின்றன.  பனியின் தாக்கத்தால் தேயிலை செடிகள் மட்டுமின்றி காய்கறிசெடிகளும் கருகி விடுகின்றன. இதை தடுக்கும் வகையில், விவசாயிகள் தென்னங்கீற்றுகளை  கொண்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். இருந்தாலும்,  கேரட், பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பனியால் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அதுபோல பிரபலமான  ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் பனி காரணமாக சேதமடைந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், பாப் – அப் முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருஐகிறது. ஊட்டியில் நேற்று உறைபனியின் தாக்கம்  அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 1 டிகிரி செல்சியசும் வெப்பநிலையும்  பதிவாகி இருந்தது.

ஊட்டி அருகேயுள்ள தலைகுந்தா, பைக்காரா, நடுவட்டம் மற்றும் கிளன்மார்கன் போன்ற பகுதி களில்  கடும் குளிர் நிலவுகிறது. பைக்காரா மற்றும் சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் குளிரால் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், காலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும் கூலித் தொழிலாளி கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் சிறு குழந்தைகள் குளிரால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.