சென்னை:

சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் ஒருவரும் பலியானார்.

கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள பேக்கரியில் நேற்று நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேக்கரியின் கதவை திறந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். அப்போது கடையின் உள்ளே இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது.  இதனால் நாலாபுறமும் தீ பரவியது. இதில் தீயணைப்பு வீரர்கள் 3 பேருக்கு 80 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டது. மொத்தம் 45 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் கொடுங்கையூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விக்னேஷ் மற்றும் காவலர் ஜெயபிரகாஷ், அந்தோணி, புருஷோத்தமன் ஆகியோரும் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் ஏகராஜன் என்ற தீயணைப்பு வீரர் இன்று காலை உயிரிழந்தார். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும்  பொதுமக்கள் ,  போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினரை சென்னை காவல்துறை ஆணஐயாளர்  ஏ.கே.விஸ்வநாதன் சென்று ஆறுதல் கூறினார்.