நாள் ஒன்றுக்கு 1லட்சம் பேர் பயணம்: சென்னை மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு!

சென்னை:

சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் சேவையை அதிகரிக்கப்பட்டு உள்ளது.  தற்போதைய நிலையில் பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தொட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக  ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும், வார நாட்களிலும் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும்  அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையில், தற்போதைய நிலையில் புளூ லைன்  (வண்ணாரப்பேட்டை – விமானநிலையம் வழி எல்ஐசி) வழித்தடத்தில் 7 நிமிடங்களுக்கு ஒருமுறை யும் கிரீன் லைன் ( சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை ) வழித்தடத்தில் 14 நிமிடங்க ளுக்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மெட்ரோவில், தினசரி 1 லட்சம் மக்கள் பயணித்து வரும் நிலையில், அவர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 26ம் தேதி முதல் வார நாட்களில் ( காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மற்றும் மாலை 5 மணிமுதல் 8 மணிவரை) புளூலைன் வழித்தடத்தில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில், கிரீன்லைன் வழித்தடத்தில் 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

மக்கள் நெருக்கடி அதிகமில்லாத மற்ற நேரங்கள், விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் வழக்கம்போல புளூலைன் தடத்தில் 7 நிமிடங்களுக்கு ஒருமுறையும், கிரீன்லைன் தடத்தில் 14 நிமிடங்களுக்கு ஒருமுறையும் ரயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரயிலை மக்கள் உபயோகப்படுத்தி வருவது அதிகரித்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் பயணம் செய்யும் நிலை வந்தால்,  அதன் சேவை இரண்டரை நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.