புதுடெல்லி:
பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தில் சட்ட திருத்தம் செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற  மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

அரசியல் சாசனத்தின் 124-வது திருத்த மசோதாவான இந்த சட்ட முன் வடிவுக்கு மக்களவையில் செவ்வாய்க் கிழமை ஒப்புதல் பெறப்பட்டது. மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதா, இரவு 10 மணி வரை நடந்த 8 மணி நேர விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது.

மசோதாவை ஆதரித்து 165 பேரும், எதிர்த்து 7 பேரும் வாக்களித்தனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, இனி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

அவரது ஒப்புதலுக்குப் பிறகு இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறும்.
இதற்கிடையே, இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தினார். இதனை இடதுசாரிகளும் ஆதரித்தனர்.

இது தொடர்பாக திமுக கொண்டு வந்த தீர்மானம் வாக்கெடுப்பின் அடிப்படையில் தோல்வியடைந்தது. அதே போன்று சில எதிர்கட்சிகள் கொண்டு வந்த 5 திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.

எதிர்கட்சிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்துப் பேசிய மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், இந்த சட்டதிருத்தத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் 50 சதவீத இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படாது என்று உறுதியளித்தார்.

முன்னதாக, தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசு அவசர, அவசரமாக இந்த இட ஒதுக்கீடு மசோதவை கொண்டு வந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்த மசோதா குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் கூறும்போது, பொதுப்பிரிவினரில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையிலேயே கூறியிருந்தோம். ஆகவே இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்கின்றோம்.
கடந்த 4 ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு, தேர்தல் நெருங்கும் போது இட ஒதுக்கீடு மசோதாவை அவசர, அவசரமாக கொண்டு வருவது ஏன்? என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.