சாத்தான்குளம் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை… எடப்பாடி

சென்னை:

சாத்தான்குளத்தில் காவல்துறையினரானல் அடித்துக்கொல்லப்பட்ட உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர்  எடப்பாடி அறிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தை மீறி கடையை திறந்து வைத்திருந்த தாக கூறி, காவல்துறையினர், கடையை நடத்தி வந்த தந்தை மகனை சரமாரியாக அடித்ததில், அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த விவகாரம் தென்மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதுதொடர்பாக உயர்நீதி மன்றம் கிளையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை மக்களிடையே உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  சாத்தான்குளத்தில் உயிரிழந்த வணிகர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்த ஜெயராஜ்,  பென்னிக்ஸ் ஆகியோர் குடும்பத்துக்கு  தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக  அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும்,

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ஏற்கனவே, இரண்டு எஸ்.ஐ.க்கள், 2 தலைமை காவலர்கள் பணி இடை நீக்கம்  செய்யப்பட்டு இருப்பதாகவும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.