சென்னை: தமிழ்நாட்டில் அரசு பெண்கள் கலை கல்லூரிகள் குறைவாக உள்ளது, மேலும் கல்லூரிகள் தொடங்கப்படுமா என சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர்,  மேலும் 10 புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, உயர்கல்வித்துறை தொடர்பாக திமுக எம்எல்ஏ சேகர்பாபு, காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி கேள்வி எழுப்பினர்.

சேகர்பாபு பேசும்போது,   வட சென்னையில்  6 சட்டப்பேரவை தொகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. ஆனால், இங்கு ஒரே ஒரு பெண்கள் கல்லூரியான பாரதி கல்லூரி மட்டுமே உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாணவிகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. எனவே அக்கல்லூரியில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தவும், கூடுதல் கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டும் என, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சேகர் பாபு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன்,  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் கல்லூரிகளின் மேம்பாட்டுக்காக  ரூ.210 கோடி நிதி ஒதுக்கியும், கட்டடங்கள் கட்ட ரூ.150 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாரதி பெண்கள் கல்லூரியில், கொரோனா பரவல் காரணமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. தற்போது கட்டடங்கள் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் அரசுக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரம்பிய பிரிவுகளில் கூடுதலாக 20 விழுக்காடு மாணவர்கள் சேர்க்கையில் ஒதுக்கீடு செய்து மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாணவிகள் சேர்க்கை அதிகப்படுத்தப்படும்.

அதேபோன்று 15 விழுக்காடு அரசு உதவி பெறும் கல்லூரிக்கும், 10 விழுக்காடு தனியார் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் கூடுதல் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு சேர்க்கை நடைபெறும்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமி, தமிழ்நாட்டில் அரசு பெண்கள் கலை கல்லூரிகள் குறைவாக உள்ளன, மேலும் பெண்கள் கல்லூரிகள் தொடங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், கடந்த 2011 முதல் தற்போது வரை 92 கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இந்தாண்டு 10 புதிய கல்லூரிகள் அமைப்பதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.