சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 10 நீதிபதிகளும் இன்று பதவியேற்றனர்… விவரம்…
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கிய நிலையில், 10 நீதிபதிகளும் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்தநீதிபதிகளின் எண்ணிக்கை 75. ஆனால், தற்போது 54 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். . இதனால், காலியாக இடங்களை நிரப்பக்கோரி வலியுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாவட்ட நீதிபதிகள் பலரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்ற கொலிஜியத்திற்கு பரிந்துரைத்தது. அதை ஏற்றுக்கொண்ட கொலிஜியம், அதை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது. குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, மாவட்ட நீதிபதிகள் 10 பேரும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றனர். உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 11 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது.
இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்ற நீதிபதிகள் விவரம்
1. ஜி.சந்திரசேகரன்
1962ம் ஆண்டு மே 31ந்தேதிபிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். சேலம், ஸ்ரீவில்லிப்புத்தூர், கோவை, முசிறி, காரைக்குடி, திருச்சி, நாமக்கல், சென்னை, பொள்ளாச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாகவும், தமிழ்நாடு நீதித்துறை பயிற்சி மைய இயக்குநராகவும் இருந்தவர்.
2. ஏ.ஏ.நக்கீரன்
1963ம் ஆண்டு மே 10ந்தேதி பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். பொன்னேரி, திருச்சி, அம்பத்தூர், நாங்குனேரி, உளுந்தூர்பேட்டை, செய்யாறு, சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், உதகமண்டலம் ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தார்.
3. வி.சிவஞானம்
1963ம் ஆண்டு ஜனவரி 1 இல் மயிலாடுதுறையில் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். மயிலாடுதுறை, கும்பகோணம், ஈரோடு, நாமக்கல், பவானி, துறையூர், அரியலூர், கடலூர், பண்ருட்டி, பெரம்பலூர், சென்னை, திருவாரூர், கடலூர் ஆகிய நீதிமன்றங்களிலும் தீர்ப்பாயங்களிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
4. ஜி.இளங்கோவன்
1963ம் ஆண்டு ஜூன் 6 இல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். கோவை, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, திருமங்கலம், மதுரை, உத்தமபாளையம், குளித்தலை, கரூர், திண்டுக்கல் ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தார்.
5. எஸ்.ஆனந்தி
1960ம் ஆண்டு ஜூலை 31 இல் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். செங்கல்பட்டு, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, சிவகங்கை, நாமக்கல், திண்டுக்கல், சென்னை, திருச்சி ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தார்.
இவரது தந்தையும் மாவட்ட நீதிபதியாக இருந்தவர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நிலையில் காலமானார்.
6. எஸ்.கண்ணம்மாள்
1960ம் ஆண்டு ஜூலை 20 இல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். கிருஷ்ணகிரி, உடுமலைப்பேட்டை, சங்ககிரி, கோவில்பட்டி, திருநெல்வேலி, மேலூர், தஞ்சாவூர், திருச்சி, திருச்சேங்கோடு ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தார்.
7. எஸ்.சதிக்குமார்
1963ம் ஆண்டு ஜூலை 18 இல் பிறந்தவர். 1994 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர். சிவகங்கை, திருவொற்றியூர், சேலம், கள்ளக்குறிச்சி, பொன்னேரி, செஞ்சி, பவானி, சென்னை, அரூர் ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தார்.
நிதிநிறுவன மோசடிகளை விசாரிக்கும் டான்பிட் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.
8. கே.முரளி சங்கர்
1968 ம் ஆண்டு மே 31 இல் பிறந்தவர். 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர். கும்பகோணம், கோவை, சேலம், சங்ககிரி, பாபநாசம், கொடுமுடி, தாராபுரம், நாமக்கல் ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தார்.
9. செல்வி ஆர்.என்.மஞ்சுளா
1964ம் ஆண்டு பிப்ரவரி 16 இல் பிறந்தவர். 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர். திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாங்குனேரி, கோவில்பட்டி, சென்னை ஆகிய நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தார்.
சென்னையில் உள்ள போக்ஸோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தவர்.
10. டி.வி.தமிழ்ச்செல்வி
1968ம் ஆண்டு ஜூன் 19 இல் ஈரோட்டில் பிறந்தவர். 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வானவர். ஈரோடு, கோவை, தஞ்சாவூர், கரூர், சேலம் ஆகிய நீதிமன்றங்களில் பணிபுரிந்தார்.
இவர்கள் 10 பேரும் இன்று முதல் தங்களது நீதிபதி பணியை, அமர்வு நீதிபதிகளுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளனர்.