டில்லி:

10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்திருக்கும் மோடி அரசு. நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு  மக்களை ஏமாற்றி வருகிறது என்று அதிமுக எம்.பி.யும்  மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை சரமாரியாக குற்றம் சாட்டினார்.

தம்பிதுரை

பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில்  இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா உயர்ஜாதியினரை மனதில் கொண்டு, அவர்களின் வாக்கு வங்கியை குறி வைத்தே கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பாராளுமன்ற மக்களவையில் இந்த சட்டம் குறித்த விவாதத்தின்போது பேசிய தம்பித்துரை,    பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு நிறைய நலத்திட்டங்கள் ஏற்கனவே உள்ளன. எதற்காக அவர்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு எனக் கேள்வி எழுப்பினார். அப்படியானால் இப்போது வழங்கப்படும் இந்த இடஒதுக்கீட்டின் பொருள் என்ன? இட ஒதுக்கிடு என்றால் என்ன என்று தெரியுமா என்றும் கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் மசோதா இன்று மாநிலங்களையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை  பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்காக 10 சதவிகித இடஒதுக்கீடு தந்து நிறைவேற்றி   உள்ளார்கள்.  இது ஒரு பாதிப்பான செய்தியாகும். சமுக நீதிக்காகத்தான் இடஒதுக்கீடு வேண்டுமே ஒழிய பொருளாதா ரீதியில் இடஒதுக்கீடு தந்தால், ஊழலும், அநீதியும் பிரச்சினையும்தான் வரும் என்று குற்றம் சாட்டினார்.

ஜாதியை ஒழிக்க வேண்டும்… மக்களிடையே உள்ள  ஏற்றத்தாழ்வு நீக்கப்பட வேண்டும், மனிதன் மனிதாக வாழ வேண்டும்  என்ற நோக்கில்தான் இடஒதுக்கீடு  கொண்டு வரப்பபட்டது. ஆனால்,  தற்போது அதை  திசை திருப்புவதற்காகவே பொருளாதார அளவில் இட ஒதுக்கீடு மசோதாவை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.

அரசியல் சட்டத்தை இயற்றிவர்கள்கூட சாதி வேற்றுமை இருக்கக் கூடாது என்பதற்காகவே சாதி அடிப்படையிலான இடஓதுக்கீட்டை வரவேற்றனர். மேலும் பெரியார், அண்ணா போன்ற திராவிட தலைவர்களால் தமிழகத்தில் இடஒதுக்கீடு செம்மையான பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவேதான் தற்போது   பெயருக்கு பின்னால் யாரும் சாதி பெயரை வைத்துக்கொள்வது கிடையாது.

ஆனால், தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் அனைவரும் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை வைத்துக்கொள்கின்றனர். மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, தேவகவுடா, அகிலேஷ் யாதவ் என அனைவரும் தங்களது ஜாதி பெயரைத்தான் முன்னிலைப்படுத்துகிறார்கள்… ஏன்  நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் நரேந்திரன் -தான் ஆனால் அவரே சாதி பெயரான மோடியை வைத்துள்ளார்… இங்கு நானோ மற்ற எவரோ தங்களது ஜாதி பெயரை வைத்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது பட்டேல், ஜாட், மராத்தா போன்ற ஜாதியினரின் போராட்டம் காரணமாக நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மோடி அரசு தற்போது பொரளாதார ரீதியில் பின்தங்கி உள்ள வர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வருகின்றனர். இதற்கு அடிப்பபடை ஆண்டு வருமானமாக ரூ.8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வாங்குபவர்கள் பின்தங்கியவர்களா என்று கேள்வி எழுப்பிய தம்பி துரை, மாதம் 70 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுபவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களா என்றும் கடுமையாக சாடினார்.  இந்த இடஒதுக்கீடு சட்டம்  மோடி அரசின் ஏமாற்றுவேலை என்றும்,  வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு பணம் அடிப்படையிலேயே பாஜக அரசு கொண்டு வந்துள்ள ஒரு தவறான திட்டம்தான் இந்த  பொருளாதார பின் தங்கியவர்களுக்கான  இட ஒதுக்கீடு சட்டம்.

இவ்வாறு தம்பித்துரை கூறினார்.