நெட்டிசன்:

சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேட்க வேண்டிய 10 கேள்விகள்

தமிழக / இந்திய ஊடகத்தினர் சசிகலாவை நேர்காணல் செய்திருக்கிறார்கள். ஆனால் யாருமே சசிகலாவிடம் கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்விகளை கேட்கவில்லை.

சசிகலாவை பகைத்துக்கொள்ள கூடாது சசிகலாவின் தயவு தமக்கு தேவை என்பது அவர்களது நோக்கமாக இருக்கலாம். அல்லது அவரிடம் கொட்டிக்கிடக்கும் கோடிக்கணக்கான பணம் காரணமாக இருக்கலாம்.

ஆனால் நேர்காணலை நான் செய்திருந்தால் இந்த 10 கேள்விகளை நிச்சயம் கேட்டிருப்பேன் –

  • 01. ஜெயலலிதாவின் சொத்துக்கள் அவரின் இரத்த உறவு இல்லாத நீங்கள் கையகப்படுத்தி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது. ஜெயலலிதா சொத்துக்களை உங்களுக்கு வழங்குவதாக உயில் எழுதி இருந்தால் எப்போது எழுதப்பட்டது? ஏன் அதை பகிரங்கப்படுத்தவில்லை? அந்த உயிலை பகிரங்க ஆய்வுக்கு உட்படுத்தி மக்கள் மத்தியில் உங்கள் நேர்மையை உறுதிப்படுத்த தயாரா?
  • 02. ஜெயலலிதா சிகிச்சை எடுத்த சமயம் அவரை பார்வையிட அவரது இரத்த உறவான தீபாவை நீங்கள் அனுமதிக்கவில்லை. 70 நாட்களுக்கு மேல் தினமும் ஜெயலலிதாவை பார்க்க வந்த முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை நீங்கள் ஒரு நாள் கூட பார்க்க அனுமதிக்கவில்லை. மர்மமாக ஏதோ நடக்கிறது, ஜெயலலிதா கொலை செய்யப்பட்டு விட்டார் என்று ஊடகங்களில் செய்திகள் பரவிய பின்னரும் கூட நீங்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. மற்றவர்கள் ஜெயலலிதாவின் அருகில் சென்றால் தொற்று ஏற்படும் என்றால் அதே தொற்று நீங்கள் அருகில் சென்றாலும் ஏற்படும். மேலும் அப்பலோ போன்ற நவீன வைத்திய சாலைகளில் தொற்றை தடுக்க கூடியவாறு உடையணிந்து நோயாளியை பார்க்க முடியும். அப்படிக்கூட யாரையும் பார்க்க அனுமதிக்காது ஏன்?
  • 03. யாருமே சாட்சி இல்லாத நிலையில் ஜெயலலிதா கையொப்பம் / கைநாட்டு வைத்தார் என்று நீங்கள் சொல்லும் ஆவணங்களை நம்ப முடியாது. அப்படியான தருணங்களில் சட்டப்படி வக்கீல் மற்றும் சாட்சி இருக்கவேண்டும். எனவே அந்த ஆவணங்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்த ஆவணங்களை உண்மை எனில் அவற்றை பகிரங்க ஆய்வுக்கு உட்படுத்தி மக்கள் மத்தியில் உங்கள் நேர்மையை உறுதிப்படுத்த தயாரா?
  • 04. ஜெயலலிதாவால் சதிகாரர்கள் என்று விரட்டப்பட்டு அவர் உயிரோடு இருக்கும் வரை போயஸ் தோட்டத்திற்கு அனுமதிக்கப்படாத உங்கள் கணவர் நடராஜன் மற்றும் உறவினர்கள் ஜெயலலிதா இறந்த பின்பு அவரது உடலை சுற்றி அரணாக நின்றார்கள். ஜெயலலிதாவால் சதிகாரர்கள் என்று கூறபட்ட வர்கள், அவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்தார்கள், எனவே எனக்கு அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உங்களது மன்னிப்பு கடிதத்தில் கூறப்பட்டவர்கள் ஜெயலலிதா இறந்த பின்னர் போயஸ் தோட்டத்திற்கு உங்களால் அனுமதிக்கப்பட்டது ஏன்?
  • 05. சாதாரண திரைப்பட சீடி விற்ற நீங்கள் டாஸ்மாக் சாராய வியாபாரம் முதல் ஜாஸ் சினிமாஸ் வரை ஏராளமான நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்திருக்கிறீர்கள். பங்குகளை வாங்கியியிருக்கிறீர்கள். அவ்வளவு பணத்தை எப்படி? எப்போது சம்பாதித்தீர்கள்?
  • 06. நீங்களும் உங்கள் உறவினர்களும் ஏராளமான கட்டிடங்கள், சொத்துக்கள், நிறுவனங்களை மிரட்டி பலாத்காரமாக வாங்கி இருப்பதாக குற்றசாட்டுகள் உள்ளன. நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் அந்த குற்ற சாட்டுகள் தொடர்பில் பகிரங்க விசாரணை நடத்தவும் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்து நீங்கள் குற்றமற்றவர் என்பதை மக்களுக்கு நிரூபிக்கவும் முன்வருவீர்களா?
  • 07.கட்சியில் அனுபவம் உள்ள நீண்ட காலம் உழைத்த பலர் இருக்க நீங்கள் பொது செயலாளர் ஆக வேண்டிய அவசியம் இல்லை. கட்சிக்காரர்கள் வேண்டினாலும் கூட நீங்கள் மனச்சாட்சிப்படி பொருத்தமான ஒருவரை நியமித்து ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை நீங்கள் அரசியலுக்கு வாராமல் இருந்ததைப்போல இருந்திருக்கலாம். கட்சியின் மரபையும் மீறி பலரின் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் மீறி நீங்கள் பொது செயலாளர் ஆக வேண்டிய அவசியம் இல்லை. அப்படி உங்களுக்கு அரசியலில் ஈடு பட ஆசை வந்திருந்தாலும் கட்சியின் அங்கத்தினராகி, தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகி, சட்ட மன்றத்துக்கு வந்து படிப்படியாக பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடாமல் குறுக்கு வழியில் பதவியை அடைந்தது தவறு என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
  • 08. முதலமைச்சராக பதவியில் இருந்த பன்னீர் செல்வத்தை அடுத்த தேர்தல் வரை பணிபுரிய விடாமல், மக்களதும் மீடியாக்களதும் கட்சி தொண்டர்களதும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் மீறி நீங்கள் முதலமைச்சராக வர வேண்டிய அவசரம் என்ன என்பது இன்று பலரின் கேள்வியாக இருக்கிறது. அடுத்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நின்று பதவியை அடைந்திருக்கலாம். அப்படி முதலமைச்சர் தவறுகள் விட்டாலும் பொது செயலாளர் என்ற வகையில் எந்த கணத்திலும் உங்களால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் அல்லது நீக்க முடியும் என்ற நிலையில் நீங்கள் அவசரமாக முதலமைச்சர் பதவியை அடைய வேண்டிய தேவை ஏதும் இருக்கவில்லை. ஊழல் செய்து சேர்த்த உங்கள் சொத்துக்களை காப்பாற்ற உங்களுக்கு பதவி தேவைப்படுகிறது. எனவேதான் நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்திருக்கின்ற நிலையிலும் பிடிவாதமாக முதலமைச்சர் ஆக வேண்டும் என்று துடிக்கிறீர்கள் என்ற குற்ற சாட்டு பரவலாக இருக்கிறது. அது உண்மை இல்லை எனில் நீங்கள் ஜெயலலிதாவுக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தில் கூறியபடி எந்த ஒரு பதவியையும் அடையும் ஆசை உங்களுக்கு இல்லை என்று இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு நிரூபித்து காட்டலாமே?
  • 09. இன்னும் ஒரு வாரத்தில் உங்களுக்கு எதிரான சொத்து ஊழல் குற்ற வழக்கில் தீர்ப்பு வர இருக்கிறது. உங்களது அக்காவின் மகன் சுதாகரனுக்கு நடத்திய ஆடம்பர திருமணத்தால் தான் ஜெயலலிதாவுக்கும் உங்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டதுடன் ஜெயாவின் ஆட்சியும் அப்போது பறிபோனது. அந்த வழக்கில் நீங்கள் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட பின்னர் அரசியலுக்கு வந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்பது பலரின் கருத்து. நீங்கள் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் நீங்கள் குற்றவாளி என தீர்ப்பு வந்தால் பன்னீர் செல்வம் போன்ற யாரையாவது முதலமைச்சராக நியமிக்க வேண்டி இருக்கும். தீர்ப்பு வரும் வரை உங்களுக்கு பொறுக்க முடியாத காரணம் என்ன?
  • 10. தீர்ப்பு பாதகமாக அமைந்து நீங்கள் சிறை செல்ல நேரிட்டால் நீங்கள் இவ்வளவு போராடி அடைய ஆசைப்படுகின்ற உங்கள் அரசியல் வாழ்வு என்ன ஆகும்?

என். ஜீவேந்திரன்