சென்னை:

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகைளை உருவாக்கி உள்ள நிலையில், மத்தியஅரசின் புதிய சட்ட மசோதாவை தடை செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுவகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது.

ஆனால், ஏற்கனவே இட ஒதுக்கீடுகள் 50 சதவீதத்துக்கு அதிகமாகக் கூடாது என்ற உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பு உள்ளது. ஆனால், அதை மீறி  அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்ற  மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியடிரசு தலைவர் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள  உயர் சாதியினருக்கு 10சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்ய கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.