புதுடெல்லி:

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப் பிரிவினக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.


பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுவகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இட ஒதுக்கீடுகள் 50 சதவீதத்துக்கு அதிகமாகக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, சில எதிர்கட்சிகளுடன் துணையுடன் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

10 சதவிகித இடஒதுக்கீட்டு மசோதாவுக்கான வாக்கெடுப்பில் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இதையடுத்து, மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன்மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. 149 உறுப்பினர்களின் ஆதரவுடன் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

இந் நிலையில், குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பப்பட்டது. 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கினார்.