உயர் வகுப்பினருக்கான வருமான சான்று தொடர்பான வழக்கு… தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

யர் வகுப்பினருக்கான வருமான சான்று தொடர்பான வழக்கில், தமிழகஅரசு பதில்அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய வருமான சான்று மற்றும் சொத்து சான்று வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்காக 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள் இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் என்றும்,  இந்த இடஒதுக்கீட்டு சலுகையைப் பெற அந்தந்த பகுதி  தாசில்தாரர்களிடம் இருந்து வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து மற்றும் வருமான சான்றுகள் வழங்க தாசில்தாரர்களுக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாம் என, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த (ஜூன்)  4 ம் தேதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதனால் சான்றிதழ் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ரெட்டி நல சங்கத்தின் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர் கிருபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று  சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்  சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து,  சான்றிதழ் வழங்குவது ஏன் நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறித்து வரும் 30 ஆம் தேதி பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

You may have missed